ஜெனிவா தீர்மானம் – யாருக்கு வெற்றி?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒப்பிடும் போது, வலுவான ஒன்றல்ல.
இதில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை கொடுக்கின்ற அல்லது வெளிப்புறத் தலையீட்டு அச்சுறுத்தல்களை கொடுக்கின்ற விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.
குறிப்பாக, 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 30/1 தீர்மானத்தில் கூட வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
அத்தகைய அழுத்தங்கள் கூட இந்த தீர்மானத்தில் கொடுக்கப்படவில்லை. அப்படிப் பார்த்தால் இது பின்நோக்கி திரும்பிய தீர்மானம் எனலாம்.
இதில், ஒரு பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்க வேண்டும் என மாத்திரம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அதில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பதன் அவசியம் கூட வலியுறுத்தப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் இதனைத் தனக்கு கிடைத்துள்ள வெற்றியாக கொண்டாட கூடும்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாக தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியை கொடுத்திருக்கிறது.
அதன் அடிப்படையில் தான், வெளிநாட்டு தலையீடுகளுடன் கூடிய பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்ற விடயம் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை.
அது தவிர, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ள சூழலில், இந்தத் தீர்மானத்தை பிரித்தானியா, கனடா உள்ளிட்ட அனுசரணை நாடுகள் நிறைவேற்றிக் கொள்வதற்கு கடும் சவாலான சூழல் இருந்தது.
அதுவும் கூட இந்த தீர்மானம் , கடந்த 6ஆம் திகதி நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், பல திருத்தங்கள் செய்யப்படுவதற்கும், விட்டுக்கொடுப்புகள் மற்றும் சமரசங்களுக்கு உட்படுவதற்கும் காரணமாக அமைந்தது.
பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு நீர்த்துப்போன- ஏமாற்றம் தரும் தீர்மானம்.
ஆனால், இந்த தீர்மானத்தை கொண்டு வராமல் தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி வெற்றி அளிக்கவில்லை.
இந்த தீர்மானம் சிறிலங்காவை அடுத்த இரண்டு ஆண்டுகள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருப்படுவதற்கு வழி வகுத்திருக்கிறது.
அதற்கு காரணமான 51/1 தீர்மானத்தின் ஆணையைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
51/1 தீர்மானத்தில் அடிப்படையில் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், சிறிலங்கா பொறுப்புகூறல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதனை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.
சிறிலங்காவுடன் இணைந்து சீனா, கியூபா,எதியோப்பியா போன்ற நாடுகளும் கூட இந்த வெளிப்புற தலையீட்டுக்கு எதிராக பேரவைக் கூட்டத்தில் கருத்துக்களை வெளியிட்டிருந்தன.
இதனால் எந்தப் பயனும் இல்லை என்றும், நிதியை வீணடிக்கும் செயற்பாடு என்றும் விமர்சிக்கப்பட்டது.
அத்துடன் முன்னுதாரணமற்ற ஒரு நடவடிக்கை என்றும் சிறிலங்கா சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.
ஆனால்,இந்தத் தீர்மானத்தில் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற் திட்டத்தின் ஆணையை நீடிப்பது தொடர்பாக வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.
அதற்குப் பதிலாக, 51/1 தீர்மானத்தின் ஆணையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது என்ற சொல்லாடலின் மூலமாக- முன்னைய ஆணை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி, பொறுப்புகூறல் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சிறிலங்கா எதிர்த்திருந்தாலும் சிறிலங்காவின் நட்பு நாடுகள் இது வீண் முயற்சி எனக் கூறியிருந்தாலும், இந்த தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக, வாக்கெடுப்பை கோருவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை.
இந்த தீர்மானத்தை, பிரித்தானியா முன்வைப்பதற்கு முன்னரே, சிறிலங்கா அரசாங்கம் அதனுடன் பேரம் பேசத் தொடங்கி விட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதை இடைநிறுத்தி வைக்குமாறு- கூறியது.
அதுமாத்திரமன்றி சிறிலங்காவுக்கு ஆதரவான வேறு பல நாடுகளும் கூட அவ்வாறு கூறியிருந்தன.
ஆனால், பிரித்தானியா அதற்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் ஆணையை நீடிக்கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது.
இரண்டு ஆண்டுகள் கண்காணிப்பு நிலையில் இருந்து விடுபடுகின்ற போது, பொறுப்புக்கூறல் செயற்திட்டம் செயலற்றுப் போய்விடும் ஆபத்து இருந்தது.
ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் உள்ள ஆவணங்களும் ஆதாரங்களும் அழிக்கப்படுவதற்கோ அல்லது பயனற்று போவதற்கோ வாய்ப்புகள் இருந்தன.
அதற்கு இடமளிப்பதில்லை என்பதில் பிரித்தானியா உறுதியாக நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.
இந்த அமர்வில் தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய பிரித்தானியாவின் ஐ.நாவுக்கான தூதுவர் குமார் ஐயர், தனது உரையை ஆரம்பிக்கும் போதே, உணர்வுபூர்வமான விடயம் ஒன்றை முன்னிறுத்தினார்.
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜீகரின், தந்தையான மருத்துவர் மனோகரன் அண்மையில் மரணம் அடைந்து விட்டதை அவர் சுட்டிக் காட்டி இருந்தார்.
அவர் ஐ.நாவில் நீதிக்காக நீண்ட போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற முடியாத நிலையில் மரணம் அடைந்து விட்டதை குறிப்பிட்ட குமார் ஐயர், நீதியை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் அவசரமானவை என்று வலியுறுத்திய பின்னரே, தனது உரையை தொடர்ந்தார்.
இதுபோன்ற சூழல் இரண்டு ஆண்டுகளுக்கு சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இடைநிறுத்தி வைக்கும் கோரிக்கையை வலுவற்றதாக்கியிருந்தது.
இந்த தீர்மான வரைவு மூன்று முறை மாற்றப்பட்ட பின்னர், பிரித்தானியா சில விடயங்களை நீக்கிய போதும் – சில சொற்களை மாற்றிய போதும் – அது நீர்த்துப் போகும் நிலையை எட்டிய போதும்- வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கே கடும் பிரயத்தனம் எடுத்தது.
வாக்கெடுப்புக்கு விடப்படுவதை சிறிலங்கா தவிர்த்துக் கொண்டது போலவே, பிரித்தானியாவுக்கும் அது சார்ந்த தயக்கங்கள் இருந்தன.
ஏனென்றால் சிறிலங்காவுக்கு சார்பான சூழலை அதிகரிக்கச் செய்து விடும் ஆபத்தும் அதில் காணப்பட்டது.
கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தனது பலத்தை நிரூபிப்பதில் பெரியளவில் வெற்றி பெற்றிருக்கவில்லை.
ஆனால் இந்த முறை அப்படியான சூழல் உள்ளதா என்ற கேள்வி வலுவாகவே காணப்பட்டது.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அவசர கூட்டத்தில், சிறிலங்காவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதனை தோற்கடித்து 29 நாடுகளின் ஆதரவுடன் தனக்கு சார்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா பெற்றுக்கொண்ட மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி அது.
அதற்கு பின்னர் சிறிலங்காவினால் ஜெனிவா அரங்கில் வெற்றி பெறவோ அல்லது சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொள்ளவோ முடியவில்லை.
2012 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 15 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
2013 ஆம் ஆண்டு 13 நாடுகளின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 12 ஆக குறைந்தது. 2021 ஆம் ஆண்டு 11 நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. 2022 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 7ஆக குறைந்தது.
2023 ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு ஆதரவாக -தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்த போதும், அதனைத் தடுக்க முடியவில்லை.
அதற்குப் பின்னர், 2024 ஆம் ஆண்டு சிறிலங்கா எதிர்த்த போதும், ஒரு வருடம் காலநீடிப்பு செய்யப்பட்டது.
இந்த முறை அதேபோன்று சிறிலங்காவின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டாலும் – சீனா போன்ற நாடுகள் எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும் ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த தீர்மானத்திற்கு வாக்கெடுப்பை கோருவதற்கு சிறிலங்கா தயாராக இருக்கவில்லை. நட்பு நாடுகளிடம் அதுபற்றிய கோரிக்கையையும் விடுக்கவில்லை.
இல்லாவிட்டால் சீனாவோ எதியோப்பியாவோ கியூபாவோ அதனை கோரியிருக்க முடியும்.
இதன் மூலம், எந்த நாட்டின் எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற பதிவே காணப்படும்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இந்த தீர்மானத்தை நிராகரித்திருக்கிறது. அதன் உள்ளடக்கங்களை அது ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்திருக்கிறது.
அப்படியானால், இது சிறிலங்காவுக்கு சாதகமற்ற ஒரு தீர்மானம். அப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை சிறிலங்காவினால் தடுக்க முடியவில்லை. எதிர்த்து தோற்கடிக்க முடியவில்லை.
அதனால் இதனை சிறிலங்காவுக்கு சாதகமானது என்று கூற முடியாது.
அதேவேளை, தமிழர் தரப்பை பொறுத்தவரையில், இந்த தீர்மானம் வலுவற்ற ஒன்றாக- நீர்த்துப்போன ஒன்றாக – வலுவான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டும் ஒன்றாக இல்லை.
சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கின்ற தீர்மானம் என்பதற்காக இதனை சாதகமானது என்று கொண்டாட முடியாது.
தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாக அமைந்து விட்டது என்று இதனை கொண்டாட முடியாது.
தமிழர்கள் எதிர்பார்ப்பது, இதனையல்ல, அது நீதியும் பொறுப்புக்கூறலும் தான். அதுதான் நிலையான நல்லிணக்கத்தையும் நிரந்தரமான அமைதியையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
அந்த அடியை நோக்கி இந்த தீர்மானம் நகரவில்லை என்பது இதன் முக்கியமான தோல்வியாக இருக்கும்.
-என்.கண்ணன்
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு (12.10.2025)