பாதுகாப்பு உடன்பாட்டுக்குப் பின் இந்திய தளபதியின் முதல் பயணம்
இந்தியா- சிறிலங்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னர், இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் முதலாவது சிறிலங்கா பயணமாக இந்திய கடற்படைத் தளபதியின் பயணம் அமைந்துள்ளது.
இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி நேற்று நான்கு நாள் பயணமாக கொழும்பு வந்துள்ளார்.
அவர் காலி கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதுடன், அரசியல் தலைவர்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின், 51 வீதமான பங்குகளை, இந்திய பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள மசாகோன் டொக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம் 52.96 மில்லியன் டொலருக்கு வாங்கிய பின்னர் இந்தியக் கடற்படைத் தளபதியின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு புரிந்துணர்வு உடன்பாடு மற்றும், கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தின் உரிமை மாற்றம் ஆகியவற்றுக்குப் பின்னர், இடம்பெற்றுள்ள இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் முதலாவது பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நேற்று சிறிலங்கா வந்த இந்தியக் கடற்படை தளபதி, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் லசந்த றொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயர் மார்ஷர் பந்து எதிரிசிங்க ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.