ஹமாஸ் இல்லாத பலஸ்தீனம்- நியூயோர்க் பிரகடனத்துக்கு சிறிலங்கா ஆதரவு
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு, ஹமாஸின் தலையீடு இல்லாத, இரு நாடுகள் என்ற தீர்வை முன்வைக்கும், நியூயோர்க் பிரகடனத்தை ஐ.நா பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
நேற்று நடந்த வாக்கெடுப்பில், சிறிலங்கா உள்ளிட்ட 142 நாடுகள் இந்தப் பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேல் மற்றும் அதன் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் அதற்கு எதிராக வாக்குகளித்துள்ளன.மேலும் 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்த தீர்மானம், ஹமாஸை தெளிவாகக் கண்டிப்பதுடன், அதன் ஆயுதங்களை ஒப்படைக்குமாறும் கோருகிறது.
பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவினால் இந்த பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த பிரகடனம், ஹமாஸைக் கண்டித்து, காசாவில் தலைமையிலிருந்து அவர்களை முழுமையாக விலக்கி வைக்க முற்படுகிறது.
“காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வரும் சூழலில், ஹமாஸ் காசாவில் தனது ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, இறைமை மற்றும் சுதந்திரமான பலஸ்தீன அரசின் நோக்கத்திற்கு ஏற்ப, அனைத்துலக ஈடுபாடு மற்றும் ஆதரவுடன் பலஸ்தீன அதிகாரசபையிடம் தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்” என்று இந்தப் பிரகடனம் கூறுகிறது.