ரவிராஜ் கொலை வழக்கில் தப்பிய முன்னாள் காவல்துறை அதிகாரி தேடப்படுகிறார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரபல குற்றவாளியான மண்டினு பத்மசிறி, அல்லது ‘கெஹெல்பத்தர பத்மே’ நடத்தும் தொழிற்சாலையில், கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன்கள் அண்மையில் மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதுது குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியை தேடி வருகின்றனர்.
2006 நவம்பர் மாதம், கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் , குறித்த காவல்துறை அதிகாரி முன்னர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், சந்தேக நபர் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அவர் கஞ்சா வியாபாரம் செய்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து காவல்துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த சனிக்கிழமை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியால் சேனாதீரவின் சகோதரரே, தேடப்படும் முன்னாள் காவல்துறை அதிகாரி என வட்டாரங்கள் அடையாளம் கண்டன.
பியால் சேனாதீர இந்த பொருட்களை புதைப்பதில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் காவல்துறை அதிகாரி, பணியில் இருந்த போது, புலனாய்வு அதிகாரியாகவும், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.