வசந்த கரன்னகொடவின் நூலை பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து நீக்கியது அமேசான்
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, எழுதிய நூலை, பிரித்தானியாவில் விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ள அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, The Turning Point: The Naval Role in Sri Lanka’s War on LTTE Terrorism என்ற தலைப்பில், தனது சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) என்ற தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு, அமேசானின் பொதுக் கொள்கைத் துறைக்கு சமர்ப்பித்த கோரிக்கையைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் இந்த நூலை விற்பனையில் இருந்து அகற்றுவதற்கு அமேசான் நிறுவனம் நடவடிக்கையை எடுத்துள்ளது.
கரன்னகொடவின் நூலை பிரித்தானியாவில் விற்பனை செய்வது, தடைகள் குறித்த சட்டத்தை மீறுவதாகும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமேசான் நிறுவனத்திற்குத் தெரிவித்திருந்தது.
பிரித்தானியா சட்டங்களின்படி தடை செய்யப்பட்ட ஒரு நபருக்கு நிதி அல்லது சொத்துக்களை – புலமைச் சொத்து உட்பட – வழங்குவது ஒரு குற்றவியல் குற்றமாகும். இதற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இதையடுத்து, அமேசான் பிரித்தானியா நிறுவனம், வசந்த கரன்னகொடவின் நூல் திரும்பப் பெறப்பட்டதை எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நூலின் வெளியீட்டாளர், பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆங்கில மொழி வெளியீட்டுக் குழுவின் ஒரு கிளையான, Penguin Random House India ஆகும்.
பிரித்தானிய அரசாங்கம் வசந்த கரன்னகொட மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த பல தனிநபர்கள் மீது கடந்த மார்ச் 24 ஆம் திகதி தடைகளை விதித்தது.
உலகளாவிய மனித உரிமைகள் தடைகள் விதிமுறைகள் 2020 இன் கீழ், இந்த தடை விதிக்கப்பட்டது.
சிறிலங்காவின் ஆயுத மோதல் நடந்து கொண்டிருந்த 2005 மற்றும் 2009 க்கு இடையில் கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில், சட்டவிரோத கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கரன்னகொட மீது தடை விதிக்கப்பட்டது.