ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும்
ஜெனிவா அமர்வில், பொறுப்புக்கூறல் செயற்திட்டம், ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை இரண்டு ஆண்டுகளுக்கு புதுப்பிக்க ஒத்துழைக்குமாறு, சிறிலங்கா அரசாங்கத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர, பாதுகாப்பு நிறுவனங்களை அரசாங்கம் உடனடியாகவும் பகிரங்கமாகவும் வழிநடத்த வேண்டும் என்றும், பயங்கிரவாத தடைச்சட்ட பயன்பாட்டை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.
மேலும், செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சியில் உதவ சர்வதேச நிபுணர்களை சிறிலங்கா அரசாங்கம் அழைக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான துணைப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி,
உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தை துணிச்சலுடன் முன்னெடுக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது ஒவ்வொரு அடியிலும் அரசாங்க துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
சிறிலங்காவில் கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள், நீதியின் முன் நிறுத்தப்படும் இடங்களில், அவர்கள் மீது வழக்குத் தொடர வெளிநாட்டு அரசாங்கங்கள் கடுமையாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
1983-2009 உள்நாட்டுப் போரின் போது அரசாங்கப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் பரவலாக நடத்தப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடந்த கால மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு நிலைமைகள் இன்னும் நீடிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.