50 உள்ளூராட்சி உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை
தேர்தல் நடந்து மூன்று மாதங்களாகப் போகின்ற நிலையிலும், 50 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்களுக்குப் பின்னர், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களை நியமிப்பதற்கான காலக்கெடு, உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தவறியதே இந்த நிலைக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல், அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களே நியமிக்கப்படாமல் உள்ளனர்.
உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் உட்பட தொடர்புடைய சட்டங்கள், தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான காலக்கெடுவைக் குறிப்பிடவில்லை.
உள்ளூராட்சித் தேர்தல்கள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டன, ஆனால் சுமார் 50 உறுப்பினர்கள் இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை.
சட்டப்பூர்வ காலக்கெடு இல்லாததால், அவர்கள் பெயர்களை அனுப்பும் வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய காலக்கெடுவை சட்ட விதிகள் குறிப்பிடவில்லை.
அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, உள்ளூராட்சி ஆணையாளர்களுக்கு இந்த அமைப்புகள் மீது நிர்வாக அதிகாரம் உண்டு.
அந்தந்த ஆளுநர்களுக்கும் சில முடிவெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன என்றும் ரத்நாயக்க மேலும் கூறினார்.