சொத்துக் குவிப்பு முறைப்பாடு- விசாரணையை வரவேற்கிறார் சிறிதரன்
வருமானத்திற்கு அதிகமாக, அதிகளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிவில் புலனாய்வு முன்னணி என்ற அமைப்பின் சார்பில் அதன் அமைப்பாளர்சஞ்சய மகாவத்த என்பவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.
சாதாரண பாடசாலை அதிபராக இருந்து 2010ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பெருமளவில்- வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்று அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
கணிசமான சொத்துக்கள் அவரது மனைவி மற்றும் மகளின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இது ஒரு அரசியல் சதி என்றும், தனக்கு எதிராக கட்சிக்குள் செயற்படுகின்றவர்களுக்கும் இந்தமுறைப்பாட்டைச் செய்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தனது சொத்துக்கள் பற்றிய விபரங்கள் ஒவ்வொரு ஆண்டும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நசனலின் இணையத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.