செம்மணி புதைகுழியில் இதுவரை 90 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 20ஆம் நாள் அகழ்வுப் பணி நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக கண்டறியப்பட்ட 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
ஏற்கனவே 88 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே 76 மனித எலும்புக்கூடுகள் வெளியே அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 5 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே இரண்டாவது தடயவியல் அகழ்வாய்வு தளத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரு மனித எலும்புக்கூட்டு தொகுதி சட்டரீதியாக பிரேதபரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அது நீதிவானின் உத்தரவுக்கமைய, மூடப்பட்டது.
அதேவேளை, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அண்டிய பகுதிகளை ஸ்கான் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக நேற்று துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.