மேலும்

இந்தியாவின் கையில் விழுந்தது கொழும்பு டொக்யார்ட்

கொழும்பு டொக்யார்ட் கப்பல் கட்டும் தளத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா அரசுக்குச் சொந்தமான, பாதுகாப்புத்துறை நிறுவனமான மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

சிறிலங்காவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான கொழும்பு டொக்யார்ட் பிஎல்சி நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளில், இந்த நிறுவனம், 52.96 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கிறது.

ஒனோமிச்சி டொக்யார்ட் என்ற (Onomichi Dockyard) ஜப்பானிய நிறுவனத்திடம் இருந்து வந்த இந்த பங்குகள், இந்திய நிறுவனத்துக்கு கைமாற்றப்படவுள்ளது.

இது  மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்தின் முதல் சர்வதேச முயற்சி என்றும், முற்றிலும் உள்நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து உலகளாவிய அபிலாசைகளைக் கொண்ட பிராந்திய கடல்சார் நிறுவனமாக மாறுவது ஒரு முக்கியமான மைல் கல் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்குள் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கொழும்பு டொக்யார்ட் நிறுவனம், உலகின் மிகவும் பரபரப்பான மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வழித்தடங்களில் ஒன்றான, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்திய நிறுவனத்துக்கு  ஒரு வலுவான செயற்பாட்டு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கவுள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மசகோன் டொக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனமாகும்.

போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை இது உருவாக்குவதுடன், இந்தியாவின் நாட்டின் கடற்படையை நவீனமயமாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த பரிமாற்றம் தொடர்பான உறுதியான உடன்பாடுகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *