சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வில் ஈடுபட்டவர் ‘றோ’ தலைவர் ஆகிறார்
சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வில் பங்கு வகித்த பராக் ஜெய்ன், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு அலகான றோவின் (RAW) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் றோ அமைப்பின் தலைவராக வரும் ஜூலை 1ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
1989ஆம் ஆண்டு இந்திய காவல்துறை சேவையில் இணைந்து கொண்ட பராக் ஜெய்ன், அடுத்த இரண்டு ஆண்டுகள் றோவின் தலைவராகப் பணியாற்றுவார்.
இந்தியாவின் மிகவும் உணர்திறன் வாய்ந்த சில பாதுகாப்பு நிலப்பரப்புகளில் ஜெயின் பணியாற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடக்கம், கனடா மற்றும் சிறிலங்காவில் இராஜதந்திர புலனாய்வுப் பணிகள் வரை அவர் பணியாற்றியுள்ளார்.
கனடாவில் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய போது, காலிஸ்தான் தீவிரவாத வலையமைப்புக்களை ஊடுருவி கண்காணிக்கும் செயற்பாட்டை மேற்கொண்டவர்.
அதன் பின்னர், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய பராக் ஜெய்ன், 2022 பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
தற்போது விமான ஆராய்ச்சி மையத்திற்குத் தலைமை தாங்கும் ஜெயின், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ஒப்பரேசன் சிந்தூரின் போது மூளையாக இருந்து, புலனாய்வு நடவடிக்கைகளை வழிநடத்தியவர்.
பயங்கரவாத எதிர்ப்பு நிபுணராக அவரது நிபுணத்துவம், வரும் ஆண்டுகளில் றோவின் இன் நிலைப்பாட்டை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.