யாழ்ப்பாணத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்துள்ளார்.
நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், செம்மணியில் தற்போது அகழ்வு முன்னெடுக்கப்படும் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு மாலை 5 மணியளவில் சென்ற அவர், அங்கு அணையா விளக்கு முன்பாக கரம் கூப்பி வணங்கியதுடன், மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஆறு முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய செப்பேடு, அணையா விளக்கு போராட்டத்தை ஒழுங்கமைத்த மக்கள் செயல் அமைப்பினரால் கையளிக்கப்பட்டது.
அத்துடன் மதத் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட மனுக்களும், பொது அமைப்புகளால் கையெழுத்திடப்பட்ட மனுக்களும் அவரிடம் கையளிக்கப்பட்டன.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா பணியகத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினரையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் போது பொறுப்புக்கூறல், காணி அபகரிப்பு, மீள்குடியமர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், வடக்கு மாகாண ஆளுநர் பணியகத்தில், ஆளுநர் வேதநாயகன் மற்றும் வடக்கின் ஐந்து மாவட்டங்களின் செயலாளர்கள், உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது, காணிகள் அபகரிப்பு, பொறுப்புக்கூறல், பௌத்தமயமாக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விசாரித்துள்ளார்.
மக்களின் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள வடக்கு ஆளுநர்உள்ளிட்ட அரச அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.