மேலும்

பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும்- ரணில்

ரஷ்யா தலைமையிலான பிரிக்ஸ் அமைப்பில் சிறிலங்கா இணைய வேண்டும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், பிரிக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க குழுவாக மாறியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சென் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த வால்டாய் கலந்துரையாடல் மன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது,

“ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை. அது எமது பகுதி உட்பட உலகின் பல நாடுகளுடன் தொடர்பு கொள்கிறது.

ரஷ்யாவின் தொடர்புகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.

பிரிக்ஸ் ஒரு பெரிய குழுவாக மாறியுள்ளது. வேறு எந்த பொருளாதார குழுவையும் விட பெரிய குழு அது.

இது உலகின் எமது பகுதியில் உள்ள நாடுகளைக் கொண்டுள்ளது.

எனது ஆட்சியின் போது அதன் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஏற்கனவே, பிரிக்ஸில் ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற புதிய உறுப்பினர்கள் உள்ளனர். வேறு சிலரும் விண்ணப்பித்துள்ளனர்.

இது அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒரு முக்கியமான குழு.

வளர்ந்த மேற்கத்திய நாடுகளின் குழுவில் இல்லாத சிறிலங்கா போன்ற நாடுகளை இது பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

அணிசேரா இயக்கம் சரிந்துவிட்டது. பிரிக்ஸ் அந்த இடைவெளியைக் குறைக்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் குழுவில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என 11 உறுப்பு நாடுகள் உள்ளன.

முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, 2010 இல் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக விரிவடைந்தது.

சமீபத்தில், பிரிக்ஸ் சவுதி அரேபியா, எகிப்து, எதியோப்பியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மேலும் விரிவடைந்துள்ளது.

ஆர்ஜென்ரீனா மற்றும் இந்தோனேசியா போன்ற சில நாடுகளும் இணைய அழைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *