இந்தியாவில் சிறிலங்கா இராணுவத் தளபதி – ஒப்பரேசன் சிந்தூர் குறித்து விளக்கம்
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த றொட்றிகோ, அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் புதுடெல்லி சென்றடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி, இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ்குமார் சிங், இந்திய இராணுவத் துணைத் தளபதி, இந்திய விமானப்படைத் தளபதி, இந்திய கடற்படைத் தளபதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இதன் போது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஒப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஜெய்பூரில் உள்ள இந்திய இராணுவத்தின் தென்மேற்கு பிராந்திய கட்டளைத் தலைமையத்திற்குச் சென்ற சிறிலங்கா இராணுவத் தளபதி அங்கு முக்கிய அதிகாரிகளைச் சந்தித்ததுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சிகள் தொடர்பான கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்புகளை அதிகரிப்பது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்புகளின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாளை வரை சிறிலங்கா இராணுவத் தளபதி இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகள், சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார்.