எயர் இந்தியா விமான விபத்து – உயிரிழந்தவர்களுக்கு சிறிலங்கா அனுதாபம்
எயர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் அனுதாபம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் புறப்பட்ட, எயர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த முன்னாள் குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி உள்ளிட்ட 242 பேரில்- ஒருவரைத் தவிர, 241 பேரும் உயிரிழந்தனர். மருத்துவக் கல்லூரியில் இருந்த 5 மாணவர்களும் உயிரிழந்தனர்.
மேலும் பெருமளவானோர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் சிறிலங்கா அதிபரும் வெளிவிவகார அமைச்சரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.