சிறிலங்கா தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா
சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தற்காலிக தடையை நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
எதிர்வரும் 30ஆம் நாளில் இருந்து இந்த தடை நீக்கப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் தம்மிடம் தெரிவித்தனர் என்று மொஸ்கோவுக்கான சிறிலங்கா தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்தார்.
சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதி ஒன்றில் கப்ரா வகை வண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு, கடந்த 18ஆம் நாளில் இருந்து ரஷ்யா தடை விதித்தது.
இதையடுத்து, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க தலைமையிலான சிறிலங்காவின் உயர் அதிகாரிகள் 12 பேர் கொண்ட குழுவினர், நேற்றுமுன்தினம் மொஸ்கோ சென்று, ரஷ்யாவின் விவசாயப் பொருட்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான, Rosselkhoznadzor அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
நேற்று நடத்தப்பட்ட இந்தப் பேச்சுக்களின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்தே, எதிர்வரும் 30ஆம் நாளில் இருந்து சிறிலங்காவில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சிறிலங்காவின் தேயிலை மீது விதிக்கப்பட்ட தடையுடன் தொடர்புடையதென கருதப்படும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளின் இறக்குமதிக்கான தடையை சிறிலங்கா அரசாங்கம் கடந்தவாரம் நீக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.