மேலும்

அகங்காரவாதமும், அபிலாசைகளும்

tna-leadersஅரசியல் அபிவிருத்தி  என்பது  ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வளர்ச்சி கொண்டிருக்கிறது என்பது அறியப்படாத விடயமாக இருக்கிறதா ?  அல்லது  கைவிடப்பட்ட ஒரு துறை போல் காணப்படுகிறதா? என்பது சமூக அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ள  கேள்வியாக உள்ளது.

உலகின் பல்வேறு சமுதாயங்கள் அரசியல் நாகரீகம் அடைந்த நிலையை அடையும் பொருட்டு மனித இயல்பிற்கு ஏற்ப, பகுத்தறிவின்பால் உந்தப்பட்டு பொதுநோக்கான அரசியல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு இணைந்து செயற்பட எண்ணுவதும், பங்குபற்றல் அரசியலில் ஒன்று  சேர்ந்த நிலையை பேணுவதுவும், சமூக அடையாளத்தையும் தனித்துவத்தையும் காத்து நிற்க அத்தியாவசியமானது.

அரசியல் அபிவிருத்தி நோக்கிய சிந்தனை அற்ற போட்டிகளால் சமூக அடையாளமும் தனித்துவமும் சிதைவடைந்து சீரழிந்து political decay என்று குறிப்பிடப்படும் நிலையை அடைய நேரிடும். அது மட்டுமல்லாது அரசியல் தலைவர்கள் சொந்த அரசியல் கள, தளநலன்களையே இழந்து நிற்கும் நிலையை அடைய நேரிடும்.

இதனை அமெரிக்க அரசியல் விஞ்ஞானியும் ,ஆலோசகரும் சுமார் ஐம்பது வருடங்கள் ஹவாட்பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல்துறையில்பணியாற்றியவருமான சாமுவல் ஹன்ரிங்ரன் (Samuel P. Huntington) அவர்களின் ஆய்வு கட்டுரை ஒன்றிலிருந்துபெறக்கூடியதாக இருந்தது.

அரசியல் அபிவிருத்தி என்பது ஒருசமூகத்தின் பரந்தஅளவிலான அனைத்து அரசியல் அம்சங்களின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒரு செயற்பாடாகும். தனிப்பட்ட ஒரு அலகு கொண்டு அரசியல் அபிவிருத்தியை அளவிட முடியாது என்பது பொதுவான கருத்தாகும். இது ஒரு சமூகத்தின் பொருளாதார  மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டது.

தற்காலத்திற்குரிய புதுமுறை சமூக அரசியல் வழிநடத்தல் என்பது இங்கே எதிர்பார்க்கப்படுகிறது.  சமுதாயத்தின் உள்ளே அரசியல் பகுத்தறிவை உருவாக்குதல், இது தனிநலவாத பார்வையிலிருந்து அப்பாற்பட்டு பொதுநலவாதம் குறித்த பார்வையை  உருவாக்குவது , சமூகம் ஒன்றின் மத்தியில் இருக்கக் கூடிய பல்வேறுபட்ட அரசியல் சித்தாந்த பார்வையை கொண்டவர்களை ஒரு தளத்திற்கு கொண்டு வருவது  மட்டுமல்லாது சமூக அடையாளங்களை கொண்டது என்ற அமசத்தையும் ஒருங்கிணைத்தல்.

மேலும் சனநாயக விழுமியங்களை சமூகத்தின் மத்தியிலே,  ஒரு கலாசாரமாக உருமாற்றுதல் என பல்வேறு அம்சங்களை அரசியல் அபிவிருத்தியில், கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பார்க்கப்படுகிறது.

2009 ஆண்டு பாரிய இழப்புகளை சந்தித்ததன் பின்பு தன்னல அரசியல் போக்கின் தரம் அதிகரித்து இருப்பதை தேசிய நலன்களில் ஆர்வம் கொண்டவர்களின் கவலையாக இருக்கிறது.

ஈழத்தமிழ் இனம் இதுவரையில் தமிழர்களின் அபிலாசைகளை மையமாக கொண்டு பொதுநலவாத சனநாயக பகுத்தறிவுவாத அமைப்பு ஒன்று உருவாகவில்லை என்பது குறித்தும் தேசியவாதிகள் கவலை கொண்டுள்ளனர்.

இந்த நிலை, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய ஒருமித்த அரசியல் எண்ணக் கிடைக்கை இது தான் என்று வெளிப்படையாக ஒரு விடயத்ததை கொள்கை நிறைவேற்றம் செய்யமுடியாத சிதைவுறும் அரசியலிற்குள் தள்ளி விட்டிருக்கிறது.

அரசியலில் போட்டி என்றாலேசுயநலனை மையமாக கொண்டது தான் என்பது இங்கே பலரதும் எண்ணப்பாடாக இருக்கலாம். சுயநல போட்டி அரசியலின் வரம்புகள் தேசியம் என்ற எல்லைக்கோடுகளால் வரையறை செய்யப்படுகிறது.

தேசியத்தின் வரம்புகளை மீறி செயற்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும், உதாரணமாக சிறிலங்காஅரச நிறுவனங்கள் வடக்கு-கிழக்கு பகுதிகளை இராணுவ மயமாக்கலில் ஈடுபடுவதை கண்டும் காணாது விடுவது..

மீள் குடியேற்றம் என்ற பெயரில் தமிழர் தாயக பகுதிகளை அரசியல் பலநிலையை நீர்த்துப்போகச் செய்கிறது என்று தெரிந்தும் பாராமுகமாக இருப்பது.

உள்ளுர் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை, கலாசார சீர்கேடுகள் என பல்வேறு மறைமுக செயற்பாடுகள் மூலம் இடம்பெறும் மத்திய அரசின் சட்ட ஒழுங்கு மென்மைபோக்கு மூலம் இளைய சமுதாயத்தை சீர்கெட வைப்பது,  ஆகியன இன கட்டமைப்பு அழிப்பு என்ற வகையிலேயே நோக்கப்படுகிறது.

மேலும் புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் என்ற வகையில்,இவை அனைத்தும் நசுக்கப்படும் இனத்தாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற எண்ணப்பாட்டை சர்வதேச அளவில் கொண்டு செல்வது சிறிலங்கா அரசின் நோக்கமாக தெரிகிறது.

இந்த நிலையை சர்வதேச அனுபவத்திலிருந்து ஒப்பீட்டுஆய்வுத் தத்துவ முறையில் பார்ப்போமேயானால் பல்லின சமுதாய நாடுகளில் இடம்பெறும் இனமுரண்பாடுகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து, பிரசித்திபெற்ற ArendLijphart  என்ற ஜேர்மானிய அரசியல் விஞ்ஞானியின் பார்வை மிகப்பொருத்தமானதாக தெரிகிறது.

Lijphart அவர்களின் ஆய்வில் புதிய பிராந்திய பிரிவுகளை கொண்ட இன குழுமங்கள் பிரதான ஒரு இன குழுமத்தின்  மத்தியில் உருவாக்கப்படும் பொழுது மேலும் புதிய சமூக அதிருப்பதிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.  இதனால் மத்திய ஆட்சியின் ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்படும்.

அதாவது, ஒரே மரபுவழி தொடர்பற்ற சமுதாயங்கள் காணப்படும் பிரதேசங்களில் பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரங்கள்  மூலம் தீர்வுகாண முடியாது.

ஆக, குடியேற்றத் திட்டங்கள் மூலம் ஏற்கனவே மொழி ரீதியாக ஒரே மரபுவழித் தொடர்புகளைக் கொண்ட  தமிழர் தாயகப் பகுதிகளை சிதைவடையச் செய்வது என்ற அரச திட்டத்துடன் பன்முகப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் இல்லாத  புதிய அரசியல்யாப்பு மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செல்வது என்பது தேசியத்திற்கு எதிராக செயற்படுவது போலாகிறது.

Lijphart அவர்களின் பார்வையில் உள்நாட்டு யுத்தத்தின் பின்னால், ஆழமான பிரிவினையை கண்டு விட்ட சமுதாயங்களிடையில்  அதிகாரப்பரவலாக்கல் மூலமே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும். பெரும்பான்மை சனநாயகம் பல்லின சமுதாயத்திற்கு ஒருபோதும் ஏற்றதல்ல.

அதேவேளை சர்வதேச நாடுகளின் பார்வையில் தமிழினத்திற்கு உரிய பன்முகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் நியாயத்தன்மை இருப்பதை மறுதலிக்க முடியாத நிலையிலேயே உள்ளனர்.

ஆனால் சர்வதேச மட்டத்தில்இராசதந்திரிகள் மத்தியில் தமிழர்களின் வேணவா குறித்து தமிழ் அரசியல்வாதிகளே மிதமாக சொல்வதோ அல்லது வலியுறுத்திக் கூறாது விடுவதோ ஒரு வகையில் தேசிய அழிவுப்பாதை நோக்கிய செயற்பாடாகவே பார்க்கலாம்.

அரசியல் தலைவர்களும் சிந்தனையாளர்களும் இவ்வாறு மத்திய ஒற்றைஆட்சியை ஏற்று கொண்டு சர்வதேச நாடுகள் மத்தியில் ஏகோபித்த கருத்தை வெளியிடாது சிதைவுற்றுப் போகும் அரசியலை நடத்திவர முனைவது அரசியல் அபிவிருத்திக்கு ஒருபோதும் ஏற்றதாகாது.

உதாரணத்திற்கு அரசியல் அபிவிருத்தியிலே எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வன்முறை நிலைமையை சந்தித்த ஏனைய தேசங்களை இன்று எடுத்துநோக்கினால் கிழக்கு திமோர், கம்போடியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், மசிடோனியா, கொசவோ, பொஸ்னியா ஆகிய அனைத்து தேசியங்களும் உள்ஊரிலே அரசியல் போட்டிகள் நிலவினாலும் தமது தேசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் மிகத்தெளிவாகவே உள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள இனங்கள் கூட தமது ஒருமித்த குரல்களின் பலனாக அதிகாரப்பரவலாக்கலை தமது பக்கம் கையகப்படுத்துவதில் பிரதான கவனமாக இருக்கின்றனர். இங்கே அதிகாரப்பரவலாக்கலும் சனநாயகமும் ஒரே சமமான பாதையில்செல்ல வேண்டும் என்ற நியதியைஉருவாக்குவதில் கவனமாக செயற்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம்பெரும்பான்மைவாத சனநாயகம் ஏதேச்சாதிகாரமே அன்றி அது சனநாயகமாக கருத முடியாது  என்பது  இனமுரண்பாடுகள் ஏற்பட்ட ஆசிய ,ஆபிரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் நசுக்கப்பட்டஇனங்களின் மத்தியில் இருக்க வேண்டிய கொள்கையாகும்.

இந்த நிலையிலே தமிழ் தலைவர்கள் மட்டும் தம்மத்தியிலே அகங்காரத்தையும் தன்னல போக்கையும் வளர்த்துக் கொண்டு மக்களின் அபிலாசைகளை பெரும்பான்மைவாதத்தின் கைகளில் விட்டு விடுவது நியாயமானது அல்ல.

ஆக அரசியலில் அபிவிருத்தி அடைந்த நிலையை அடைய வேண்டுமானால் சர்வதேச தளத்தில் இருக்கக் கூடிய பொதுப்பண்பான யுத்தத்தின் பின்னான நிலைமாறுகால அரசியலில் தீர்வு தேடும் பிளவுபட்ட சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு மட்டுமே ஒரே தீர்வாக இருக்க முடியும்.

பெரும்பான்மைவாத சனநாயகம் பொருத்தமற்றது. இதுவே மேலைத்தேய இராசதந்திரிகளதும், சர்வதேச அரசுகளின்  பொதுசேவை நிர்வாக அலுவலர்களதும், சமூகக்கல்வி ஆய்வாளர்களினதும் இறுக்கமான, கருத்தாகும் .

இதற்கு ஏற்ப  நிறுவன மயப்படுத்தப்பட்ட சமூக அரசியல் நகர்வுகள் முக்கியமானதாக தெரிகிறது.  ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேரழிவின் பிற்பாடு கூட, சிறிலங்கா அரசின் நகர்வுகளை திசைதிருப்பும் வகையில் எந்த ஒரு சக்திமிக்க அமைப்பும் உருவாகவில்லை என்பது மிக வருத்தப்படக் கூடிய விடயமாகும்.

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி.

 கட்டுரை பற்றிய கருத்துக்களை கட்டுரையாளருடன் பகிர்ந்து கொள்ள loganparamasamy@yahoo.co.uk என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *