யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு கடுவெல நீதிமன்றம் தடை
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, யோசித ராஜபக்ச உகண்டா செல்வதற்கு, கடுவெல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
யோசித ராஜபக்ச மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு, இன்று கடுவெல நீதிமன்றத்தில் அவரது சட்டவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உகண்டாவில் நடைபெறும் நிகழ்வு ஒன்றுக்கு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பங்கேற்க, தனது தந்தையுடன் செல்வதற்கு அனுமதி அளிக்குமாறும், யோசித ராஜபக்ச தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், யோசித ராஜபக்சவை வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்க முடியாது என்று நீதிவான் தெரிவித்து விட்டார். அவசியமானால், மேல் நீதிமன்றத்தை அணுகுமாறும் அவர் தெரிவித்தார்.
சிஎஸ்என் தொலைக்காட்சி நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ச, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கடுவெல நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.