மேலும்

கொழும்பில் சீனாவின் பயணிகள் ட்ரோன்- சோதனைப் பறப்புகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுக நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் நவம்பர் 11 ஆம் நாள் பயணிகள் ட்ரோன் சேவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக   சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்கவெல்ல தெரிவித்தார்.

பல ஆரம்ப தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்குப் பின்னர், சீன தயாரிப்பான மின்சாரத்தில் இயங்கும், செங்குத்தாக மேலே எழும்பி தரையிறங்கும் (eVTOL) ட்ரோன்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த ‘மேம்பட்ட வான்வழி போக்குவரத்து’ முன்னெடுப்பானது, கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையம் மற்றும் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பிற இடங்களுக்குப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற நபர்களுக்கு, மாற்றுப் போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கம் கொண்டது.

நேற்று இது கொழும்பு துறைமுக நகரத்தில் சோதனைப் பறப்புகளில் ஈடுபடுத்தப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த ‘ஈஹாங் இன்டெலிஜென்ஸ்’ (EHang Intelligence) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானம், ஓடுதளம் ஏதுமின்றி செங்குத்தாக மேலே எழும்பி தரையிறங்கக்கூடிய, தானியங்கி முறையில் இயங்கும், முழுமையாக மின்சாரத்தால் இயங்கும் பயணிகள் விமானமாகும்.

இது ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வான்வழிச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது இத்தகைய தானியங்கி பயணிகள் ட்ரோன்களில் ‘வகைச் சான்றிதழ்’ (type-certified) பெற்ற ஒரே வகை இதுதான் என்றும் ரம்புக்கவெல்ல தெரிவித்தார்.

AAM என்பது விமானிகளால் இயக்கப்படும் மற்றும் விமானிகள் இன்றி தானியங்கியாக இயங்கும் விமானங்களை உள்ளடக்கியது என்றும், இதில் ‘ஈஹாங்’ விமானம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது என்றும் அவர் விளக்கினார்.

இந்த விமானம் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் (CAAC) இருந்து வகைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

சிறிலங்காவில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக, அந்தச் சான்றிதழின் அடிப்படையில், நடைமுறைப்படுத்த வேண்டிய தரநிலைகள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை உருவாக்கியுள்ளது.

ஆரம்பகட்ட சோதனைகளின் போது, ​​பயணிகளின் எடையைப் பிரதிபலிக்கும் வகையில் மணல் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் விமானத்தின் செயல்பாடு மதிப்பீடு செய்யப்படும்.

இந்த கட்டத்தில் மனிதர்கள் யாரும் பயணிக்கமாட்டார்கள்.

“நாங்கள் ஆரம்பத்தில் சோதனை ஓட்டங்களுக்கு மணல் மூட்டைகளைப் பயன்படுத்துவோம். ஏற்கனவே பல சோதனைகள் நடத்தப்பட்டு விட்டன, இப்போது நாங்கள் செயல்விளக்கத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம்” என்று ரம்புக்கவெல்ல கூறினார்.

சிறிலங்காவில் இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு முன்னால், அதற்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் பணியிலும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் தாவோ மா (Tao Ma) உடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் பிராந்திய அலுவலகத்தின் ஊடாகவே இந்தத் திட்டம் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

சிறிலங்காவின் விமானப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கு சிறிலங்கா ஒரு பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பின் பிற பகுதிகளில், குறிப்பாக முக்கியமான அரசாங்கக் கட்டமைப்புகளைச் சுற்றியுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, துறைமுக நகரப் பகுதி ஆரம்பக்கட்ட செயல்விளக்க இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த ஒதுக்கப்பட்ட பகுதியில், அதிகாரிகளின் மேற்பார்வையில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இந்த வானூர்தியைச் சோதிக்க முடியும்.

இந்த வானூர்தி தானியங்கி முறையில் இயங்கக் கூடியது என்றாலும், அதன் செயல்பாட்டிற்கு முறையான வான் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு தேவைப்படும் என்று ரம்புக்கவெல்ல குறிப்பிட்டார்.

எனவே, இத்தகைய செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை சிறிலங்காவில் தற்போதைய விமானப் போக்குவரத்து அமைப்போடு பாதுகாப்பாக ஒருங்கிணைக்கவும், குறைந்த உயரத்தில் இயங்கும் வான் போக்குவரத்து முகாமைத்துவ அமைப்பை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆய்வு செய்து வருகிறது.

ஆய்வு செய்யப்படும் இந்த வானூர்தி இரு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது மற்றும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியது.

இவ்வளவு தூரத்திற்கான பயணக் கட்டணம் ஒரு பயணியருக்கு சுமார் 50 அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என்று ரம்புக்கவெல்ல தெரிவித்தார்; இது வழக்கமான உலங்குவானூர்தி போக்குவரத்தை விட மிகக் குறைவான செலவாகும்.

இருப்பினும், இது ஒரு சராசரியான மதிப்பீடு மட்டுமே என்றும், வணிக ரீதியான கட்டணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தச் செயல்விளக்கத்தை, வணிக ரீதியான பயணிகள் சேவையின் தொடக்கமாகக் கருதக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய சேவைகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, கூடுதல் தொழில்நுட்ப மதிப்பீடுகளும் முறையான ஒழுங்குமுறை ஏற்பாடுகளும் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *