கடல்சார் உரிமைகளை நிலைநாட்ட சிறிலங்கா அரசியல் விருப்பை வெளிப்படுத்த வேண்டும்
சிறிலங்காவின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் வெளிநாட்டு கொடிகளைக் கொண்ட எண்ணெய் தாங்கி கப்பல்கள் அசாதாரணமான முறையில் குவிந்திருப்பது குறித்து, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தலைமை அதிகாரி, றியர் அட்மிரல் வை. என். ஜெயரத்ன கவலை தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், தனது கடல்சார் உரிமைகளை நிலைநாட்டவும், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சிறிலங்கா அரசியல் விருப்பத்தை (political will) வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழலை எதிர்கொள்வதற்குத் தேவையான கடல்சார் கண்காணிப்புத் திறன்களும் நிறுவனக் கட்டமைப்புகளும் ஏற்கனவே சிறிலங்காவிடம் உள்ளன என்றும், ஆனால் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பதற்கான உறுதியான மனநிலைதான் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மூன்று வகையான நடவடிக்கைகளை முன்மொழிந்தார்:
முதலாவதாக, இந்தக் கப்பல்களை சிறிலங்காவின் கடல்சார் அதிகார வரம்பிலிருந்து வெளியேறக் கோருவது; இரண்டாவதாக, அனைத்துலக கடல்சார் அமைப்பு (IMO), பிராந்திய பங்காளிகள் மற்றும் கப்பல் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை அங்கிருந்து அகற்றுவது; அல்லது மூன்றாவதாக, அந்தக் கப்பல்களை சிறிலங்காவின் பிராந்திய கடற்பகுதிக்குள் கொண்டு வந்து, அவற்றுக்கெனத் தனித்தனி நங்கூரமிடும் இடங்களை ஒதுக்குவது.
இதில் மூன்றாவது விருப்பத்தையே அவர் ஆதரித்தார். இது, அனைத்துலக விதிகளுக்கு உட்பட்ட ஒழுங்குமுறையின் மீது சிறிலங்காவுக்கு இருக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், நாட்டின் மூலோபாய சுதந்திரத்தையும் பாதுகாக்கும் என்று அவர் கூறினார்.
தெற்குக் கடற்கரையில், குறிப்பாக காலிக்கு அருகில் குவிந்துள்ள இந்த எண்ணெய் தாங்கி கப்பல்களில் பெரும்பாலானவை ஈரானியக் கொடியைக் கொண்டவை என்றும், இவை ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தற்போதைய மோதலுடன் தொடர்புடையவை என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா கடல் சட்ட உடன்படிக்கையின் கீழ் சிறிலங்காவுக்கு உள்ள கடல்சார் உரிமைகளை விளக்கிய ஜெயரத்ன, இந்தக் கப்பல்கள் நாட்டின் பிராந்திய கடற்பகுதிக்கு வெளியே இருந்தாலும், அவை சிறிலங்காவின் விரிவான கடல்சார் அதிகார வரம்பிற்குள் தான் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.
கப்பல்களை வெறுமனே வெளியேறச் சொல்வது, ஒரு கடற்கரை நாடாக (coastal State) தனது பொறுப்புகளை நிறைவேற்ற சிறிலங்கா விரும்பவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கி, அனைத்துவக அளவில் நாட்டின் நம்பகத்தன்மையைக் குறைக்கக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
கடல்சார் கண்காணிப்பில் உள்ள குறைபாடுகளே பயனுள்ள நடவடிக்கைகளைத் தடுக்கின்றன என்ற கருத்தை அவர் மறுத்தார்.
கடல்சார் தகவல்களைக் கண்காணிக்கவும் புரிந்து கொள்ளவும் தற்போதைய வசதிகள் போதுமானவை என்று கூறிய அவர், “எங்கள் கடல்சார் கண்காணிப்பில் எந்தக் குறையும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக இருக்கும் அரசியல் விருப்பமும், அர்ப்பணிப்புள்ள அரசு அதிகாரிகளுமே தற்போது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், புதிய நிறுவனங்களையோ அல்லது கூடுதல் முடிவெடுக்கும் படிநிலைகளையோ உருவாக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்ட அவர், சிறிலங்கா கடற்படை, கடலோர காவல்படை, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்து செயலகம் ஆகியவற்றிற்கு இடையே பயனுள்ள ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே அவசியமானது என்று சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவின் கடல்சார் நலன்களைப் பாதிக்கும் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மற்ற நாடுகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், மாறாக நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது சொந்த அரசு நிறுவனங்களைச்a செயற்படுத்த வேண்டும் என்றும் ஜெயரத்ன வலியுறுத்தினார்.
இத்தகைய கடல்சார் அவசரச் சூழல்களைக் கையாள்வதற்குத் தெளிவான நடைமுறைகளை முன்கூட்டியே வகுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
சிறிலங்காவில் இதற்கான நிறுவனக் கட்டமைப்பு இருந்தாலும், முடிவுகளை விரைவாக எடுத்து அவற்றைச் செயல்படுத்தும் திறன் போதிய அளவில் இல்லை என்று அவர் எச்சரித்தார்.
“அரசின் நடவடிக்கைகளே மிக முக்கியமானவை” என்று குறிப்பிட்ட அவர், சிறிலங்காவின் கடல்சார் உரிமைகளையும் இந்தியப் பெருங்கடலில் அதன் மூலோபாய முக்கியத்துவத்தையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியமென வலியுறுத்தினார்.
