மேலும்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தை திருத்த நடவடிக்கை

நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தில் திருத்தங்களைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சட்டமா அதிபர் இன்று  உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்படும் என்று குறிப்பிட்ட சட்டமா அதிபர், அந்தத் திருத்தங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் நீதிமன்றத்தின் பரிசீலனைக்காகச் சமர்ப்பித்தார்.

இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மையைச் சவால் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 26 மனுக்கள் மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் தொடங்கிய வேளையிலேயே, சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்கா சட்டவாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், இந்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி, மொத்தம் 26 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

நவம்பர் 04 ஆம் நாள் நடைபெற்ற முந்தைய விசாரணையின் போது, ​​மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்; அன்றைய தினம் விசாரணை இரவு வெகுநேரம் வரை நீடித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை மற்றும் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த தங்கள் எழுத்து மூல வாதங்களை நவம்பர் 05-ஆம் நாள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *