மேலும்

சிறிலங்கா அதிபருடன் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் சந்திப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று பிற்பகல் நடந்த இந்த சந்திப்பின் போது, ​​சிறிலங்காவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான 77 ஆண்டுகால இராஜதந்திர உறவு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் மக்கள் பரிமாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டாண்மையாக இருதரப்பு உறவுகள் விரிவடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போதைய ஒத்துழைப்பின் அளவில் திருப்தி தெரிவித்த உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அங்கு  சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மார்ச் மாதம் சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகே சிக்கல்களைச் சந்தித்த இரண்டு கப்பல்களுக்கு வழங்கப்பட்ட உதவியை நினைவு கூர்ந்து, சிறிலங்காவின் மனிதாபிமான முயற்சிகளை அதிபர் அனுரகுமார திசாநாயக்க எடுத்துரைத்தார்.

அனைத்துலக சட்டத்திற்கு இணங்க சிறிலங்கா வழங்கிய ஆதரவை அமெரிக்க தூதுக்குழு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

பிராந்திய அமைதி மற்றும் உறுதித்தன்மைக்கு ஆதரவளிப்பதில் சிறிலங்காவின் உறுதிப்பாட்டை அதிபர் அனுரகுமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்தினார்.

இரு தரப்பினரும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.

அமெரிக்கா சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி இலக்காகத் தொடர்வதால், இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மற்றும் சிறிலங்கா ஏற்றுமதிகள் மீதான சுங்கவரிகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வது குறிததும் பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது.

சிறிய பொருளாதாரம் என்பதால், அமெரிக்காவுடனான  வர்த்தக இடைவெளியைக் குறைப்பதில் சிறிலங்கா சவால்களை எதிர்கொள்வதாக அதிபர் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை கூடிய விரைவில் முடிப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *