அனுரவின் பயணத்திற்கு ஒத்திகை – கண்டியை பதற்றமடைய வைத்த உலங்குவானூர்திகள்
சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள் நேற்றுக்காலை கண்டி நகரத்தின் மீது இரண்டு மணி நேரமாக பறந்து திரிந்ததால், மக்கள் பதற்றமடைந்தனர்.
கண்டியில் உள்ள சிறிலங்கா அதிபர் மாளிகைக்குப் பின்னால் உள்ள திறந்தவெளியில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகளை தரையிறங்க முடியுமா என்பதை மதிப்பிடுவதற்காகவே இந்த சிறப்பு ஒத்திகை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று கண்டிப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், இந்த சிறப்பு ஒத்திகை இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா அதிபரை ஏற்றிச் செல்லும் உலங்குவானூர்தியை, அதிபர் மாளிகைக்குப் பின்னால் தரையிறங்கும் வகையில், ஒத்திகை நடத்தப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கண்டிக்கு வருகை தரும் போது உலங்குவானூர்தியை தரையிறங்குவதற்காக, கண்டி அதிபர் மாளிகைக்குப் பின்னால் உள்ள இந்த திறந்தவெளியை இதற்கு முன்னர் பயன்படுத்திய ஒரே அதிபர் ஜே.ஆர்.ஜயவர்த்தன மட்டுமேயாவார்.
அவருக்குப் பின்னர் கண்டிக்கு வந்த அனைத்து அதிபர்களும் உலங்குவானூர்தியை அஸ்கிரிய காவல்துறை மைதானத்தில் தரையிறக்கி, அதிகாரப்பூர்வ வாகனத்திலேயே அதிபர் மாளிகைக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
