பூகோள ஊழல் தரவரிசையில் சிறிலங்காவுக்குப் பெரும் பின்னடைவு
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கோசங்களுக்கு மத்தியில், சிறிலங்கா பூகோள ஊழல் தரவரிசைப் பட்டியலில், சிறிலங்கா பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பிரித்தானியாவைத் தளமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான வேர்ல்ட் எகனொமிக்ஸ் தயாரித்த 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஊழல் புலனாய்வு குறியீட்டில், சிறிலங்கா 7.3 புள்ளிகள் சரிவைச் சந்தித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் பூகோள ஊழல் புலனாய்வு குறியீட்டின் படி 32 வது இடத்தில் இருந்த சிறிலங்கா 2025இல் 24.7 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியுள்ளது.
அதற்கு முன்னர், 2023 இல் 34 , 2022 இல் 36 , 2021 இல் 37 புள்ளிகளை பெற்றிருந்தது.
ஊழலை ஒழிப்பதாக அரசாங்கங்கள் உறுதியளித்த போதிலும், நாடு இன்னும் இந்த போரில் கீழ்நோக்கிச் செல்கிறது என்பதை இந்த தரவரிசை எடுத்துக்காட்டுகிறது.
தற்போது ஊழலுக்கான உலகளாவிய சராசரி குறியீடு 48.4 ஆகும், இது சிறிலங்கா பெற்றுள்ள புள்ளிகளை விட மிக அதிகமாகும்.
தெற்காசியாவில், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் என்பன முறையே 18.2 மற்றும் 13 புள்ளிகளுடன் ஊழல் மட்டத்தில் சிறிலங்காவை விட மோசமாக உள்ளன.
யேமன் மற்றும் லிபியா ஆகியன தலா 0 மதிப்பெண்களுடன் உலகின் மிகவும் ஊழல் நிறைந்த நாடுகளாகவும், டென்மார்க் 100 புள்ளிகளுடன் ஊழல் குறைந்த நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா, 32.5 புள்ளிகளுடன் சிறிலங்காவை விட மேலான இடத்தில் உள்ளது.
