மேலும்

அமெரிக்க – சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?

சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார்.

சிறிலங்காவில் சீனாவின் அதிகரித்து வரும் தலையீடு குறித்து செனட் வெளியுறவுக் குழுத் தலைவர் எழுப்பிய முக்கியமான கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விடுவதை குழுத் தலைவர் கடுமையாக விமர்சித்தார்.

சிறிலங்காவுக்கும் அனைத்துலக நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்பாட்டின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இது சிறிலங்காவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அனைத்துலக நாணய நிதியத்தின் ஆதரவு திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்காவின் புதிய தூதுவர் சிறிலங்காவில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்.

முதலாவது அம்பாந்தோட்டையில் உள்ள சினோபெக் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைப் பற்றியது.

சீன வெளியுறவு அமைச்சரின் பயணயத்தின் போது, ​​2026 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள் அம்பாந்தோட்டையில் உள்ள சினோபெக் சுத்திகரிப்பு ஆலை தொடர்பான உடன்பாட்டை முடிக்க பேச்சு நடத்தப்பட்டதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, தற்போதைய அனைத்துலக நாணய உடன்பாடு2026 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாக உள்ளது, புதிய உடன்பாடு கையெழுத்திடப்படக் கூடாது என்ற உணர்வு அரசாங்கத்திற்குள் அதிகரித்து வருகிறது.

முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அனைத்துலக நாணய நிதியத் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

இருப்பினும், அவரது பதவிக் காலத்தின் இறுதி மாதங்களில், சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அனைத்துலக நாணய நிதியத்துக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அனைத்துலக நாணய நிதிய உடன்பாடு திட்டமிட்டபடி முடிவடைய வேண்டும் என்றும், மற்றொரு அனைத்துலக நாணய நிதிய திட்டத்தில் நுழையாமல் நாடு தனது பொருளாதாரத்தை சுயாதீனமாக நிர்வகிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது.

குறிப்பாக, 2027 தேர்தல் ஆண்டு நெருங்கி வருவதால், அனைத்துலக நாணய நிதிய உடன்பாட்டின் கீழ் தொடர்வது, அரசியல் ரீதியாக கடினமாக இருக்கும் என்று அரசாங்கம் கருதுகிறது.

இந்தப் பின்னணியில் தான், எரிக் மேயர் சிறிலங்கா வருகிறார்.

இது தவிர சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடனான வரி உடன்பாட்டில்  இன்னும்  கையெழுத்திடவில்லை.

வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகளைக் கண்டித்து ஆளும்கட்சி மற்றும் அவைத் தலைவரின் அறிக்கைகள் வெளியான நிலையில்  எரிக் மேயரின் வருகை இடம்பெறுகிறது.

எரிக் மேயர், டொனால்ட் ட்ரம்ப்பினால் நியமிக்கப்பட்டவர்.  அவர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட ஜூலி சங்கைப் போல இருக்கமாட்டார்.

ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை செயற்படுத்துவதே அவரது நோக்கம்.

ஜூலி சங்குடனான கையாளுதல்களுடன் ஒப்பிடும்போது எரிக் மேயரைக் கையாளுவது, சிறிலங்கா அரசாங்கத்திற்கு மிகவும் சவாலானதாக இருக்கலாம்.

ஆங்கில மூலம்- உபுல் ஜோசப் பெர்னான்டோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *