தொடர் சந்திப்புக்களை அடுத்து புதுடெல்லிக்கு புறப்பட்டார் ஜெய்சங்கர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நேற்று மாலை சிறப்பு விமானத்தில் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று காலை வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்து பேசினார்.
இதன்போது, டிட்வா புயலினால் சேதமடைந்து, ஒப்பரேசன் சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இந்திய இராணுவத்தினர் புனரமைத்த கிளிநொச்சியில் உள்ள பாலத்தை இருவரும் இணைந்து மெய்நிகர் முறையில் திறந்து வைத்தனர்.
இதையடுத்து. கூட்டு செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவுக்கு 450 மில்லியன் டொலர் உதவிப் பொதியை ஜெய்சங்கர் அறிவித்தார்.
அதனையடுத்து அதிபர் செயலகத்திற்குச் சென்ற இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமானச் செயற்பாடுகள் மற்றும் அவை தொடர்பான விடயங்கள் குறித்து பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, இந்தியப் பிரதமர் மோடி கொடுத்தனுப்பிய செய்தி ஒன்றையும் சிறிலங்கா அதிபரிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்தார்.
அதையடுத்து சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சு நடத்திய இந்திய வெளிவிவகார அமைச்சர், பேரிடருக்குப் பின்னரான மீள்கட்டுமானத் திட்டங்களுக்கு இந்தியா உதவும் என உறுதியளித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தனியாகச் சந்தித்துப் பேசிய போது, பேரிடர் நிவாரண பணிகளில் வெளிப்படைத்தன்மை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இதொகா மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மலையகத் தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து பேரிடர் மீளமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார்.
மேலும் சிறிலங்காவில் உள்ள இந்திய வர்த்தக சமூகத்தினருடனும் அவர் தனியான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
தொடர்ச்சியான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு இன்று மாலை ஜெய்சங்கர் தனி விமானம் மூலம் புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.






