மேலும்

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் இந்தியா ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, டிட்வா புயலுக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டியதாக, ஜெய்சங்கர் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் கூறிய விடயங்களை இந்திய  வெளிவிவகார அமைச்சர் உன்னிப்பாக செவிமடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என பெரும்பாலான பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்கான தீர்வு  அல்ல என்ற நிலைப்பாட்டை  வெளிப்படுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஆயினும் மாகாணசபைத் தேர்தல்கள் இழுத்தடிக்காமல் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒற்றையாட்சிக்குள் எட்டப்படும் தீர்வை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள எம்.ஏ.சுமந்திரன், தாமும் அதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும், சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை என்றும் ஆனாலும், சமஷ்டி கட்டமைப்பு அவசியமே தவிர, சமஷ்டி என்ற பெயர் தங்களுக்கு முக்கியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேரிடர் நிவாரணப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் பிரஜாசக்தி மூலம் அரசியலாக்கியுள்ளதாகவும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்திய  வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இரா.சாணக்கியன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திர குமார் பொன்னம்பலமும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *