எல்லா நேரங்களிலும் சீனா உதவும்- அனுரவுக்கு வாக்குறுதி
எல்லா நேரங்களிலும் சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார்.
13 பேர் கொண்ட சீனத் தூதுக்குழுவுடன் சிறிலங்கா வந்துள்ள வாங் ஜூவான்செங் இன்று பிற்பகல், அதிபர் செயலகத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
இதன்போது, சிறிலங்கா மீளமைப்பு திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேரிடரின் போது, சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு, இதன்போது சிறிலங்கா அதிபர் நன்றி தெரிவித்தார்.
இந்த கடினமான நேரத்தில் சிறிலங்காவுக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவை பாராட்டிய அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய சீன பயணத்தின் போது இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தி, சீனா சிறிலங்காவுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று வாங் ஜூவான்செங் குறிப்பிட்டார்.
சிறிலங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்கவும், புதிய திட்டங்களைத் ஆரம்பிக்கவும் சீனா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
கிளீன் சிறிலங்கா மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும் என்றும் வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் சர்வதேச பிரிவின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பணிப்பாளர் நாயகம் பெங் ஷியூபின், (Peng Xiubin), பிராந்திய வெளியுறவு பணியக பணிப்பாளர் நாயகம் பாவோ திங் (Bao Ting) , சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச பிரிவின் தென்கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரப் பணியக பிரதிப் பணிப்பாளர் வாங் சிகி (Wang Siqi) ஆகியோரும்,
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, அதிபரின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அதிபரின் மூத்த மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியொரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


