ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை சந்திக்க போர்க்குற்றவாளிகள் முயற்சி
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்திப்பதற்கு, போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்று முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கொழும்பு வந்து சேர்ந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம், அமைச்சர் விஜித ஹேரத் எடுத்துக் கூறியுள்ளார்.
அதேவேளை, இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த சிறிலங்கா படை அதிகாரிகள் குழுவொன்றை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் சந்திக்க வைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் விடயத்தில் சரியாக செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் தமது பக்க நியாயத்தை எடுத்துக் கூற முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
எனினும், போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் படை அதிகாரிகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பாரா என்பது இன்னமும் முடிவாகவில்லை.