53 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்த எதிர்க்கட்சிகள்
தேசிய மக்கள் சக்தி ஜூன் 20ஆம் திகதி வரை, சிறிலங்கா முழுவதும் 192 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்துள்ளது.
தேர்தலின் மூலமாக, 151 உள்ளூராட்சி சபைகளில் நேரடிப் பெரும்பான்மையைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, தேர்தலுக்குப் பின்னர் பெரும்பான்மையை நிரூபித்து, மேலும் 41 சபைகளில் நிர்வாகங்களை அமைத்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, காலி, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட பல முக்கிய மாநகர சபைகளில் அந்தக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
அக்கரபத்தனை, கொட்டகலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச சபைகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து, அந்தக் கட்சிக்கு தவிசாளர் பதவியை கொடுத்து, பிரதி தவிசாளர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ளது.
அதேவேளை, எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாத 95 உள்ளூராட்சி சபைகளில், 53 சபைகளில், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி ஆட்சியமைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த 53 சபைகளில் 21 சபைகளில் மட்டும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
வடக்கில் 13 உள்ளூராட்சி சபைகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
ஏனைய கட்சிகள் 13 இடங்களில் அதிகாரத்துக்கு வந்துள்ளன.
அவற்றில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பேரவை கைப்பற்றிய 4 சபைகளும், வடக்கில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆட்சியமைத்துள்ள 2 சபைகளும் அடங்கியுள்ளன.
இதொகாவும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் தலா 3சபைகளில் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.
தற்போது, 53 உள்ளூராட்சி சபைகள் தேசிய மக்கள் சக்தி அல்லாத கட்சிகளால் நிர்வகிக்கப்படுகின்ற அதே நேரத்தில், நான்கு சபைகளில் நிர்வாகங்களை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சீதாவகபுர நகர சபை, சீதாவகபுர பிரதேச சபை மற்றும் மாவத்தகம பிரதேச சபை ஆகியவற்றின் அமர்வுகள் இரகசிய வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட மோதல்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டன.
நிர்வாக சிக்கல்கள் காரணமாக ஆராட்சிகட்டுவ பிரதேச சபையின் தொடக்க அமர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 339 உள்ளூராட்சி அமைப்புகளில் 245 சபைகளில் மட்டும் நிர்வாகங்கள் நிறுவப்பட்டன.
ஏனைய 90 உள்ளூராட்சி சபைகளின் புதிய நிர்வாகங்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இந்த வாரமும் தொடர்ந்து நடைபெறும்.