வோல்கர் டர்க் எங்கும் செல்லலாம்- யாரை சந்திக்கவும் தடையில்லை
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்காவில் எங்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அவருக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள்கள் பயணமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் நாளை கொழும்பு வரவுள்ளார்.
அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கும், அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் பேசவும் வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த கால மனித உரிமைகள் பிரச்சினைகளைக் கையாள்வதில் அரசாங்கம் நேர்மையையும், நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டையும் நிரூபிக்க விரும்புவதால், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் போது, அவர் யாரையும் சந்திக்கவோ, எந்த இடத்திற்கும் செல்வதற்கோ தடைகள் விதிக்கப்படாது என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் ஹேரத் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடுவார்.
ஏனைய அமைச்சர்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்திப்பார்.
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்துடனான சந்திப்பிற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தையும், வோல்கர் டர்க் மதிப்பீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களைச் சந்திக்க யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் செல்லவுள்ளார்.
கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடு செய்வதுடன், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் பீடாதிபதிகளையும் சந்திப்பார்.
சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் வோல்கர் டர்க் கொழும்பில் ஒரு பொது கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.
அவர் பயணத்தை நிறைவு செய்து புறப்படுவதற்கு முன்னர், ஊடகங்களிடம் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.