கோத்தாவுக்கு மோடி அழைப்பு – விரைவில் புதுடெல்லி பயணமாகிறார்
இந்தியாவுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை சிறிலங்கா அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார் என, இந்தியப் பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
இதன்போது, இந்திய மக்கள் சார்பாகவும், அவரது சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த இந்தியப் பிரதமர், கோத்தாபய ராஜபக்சவின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், சிறிலங்கா மக்கள் அமைதி மற்றும் செழிப்புடன், மேலும் முன்னேறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான சகோதர, கலாச்சார ,வரலாற்று மற்றும் நாகரிக உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும், இந்த நோக்கங்களுக்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமரின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த கோத்தாபய ராஜபக்ச, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.