மேலும்

18 வீத நிலங்கள் அமெரிக்கா வசமாகும் – எச்சரிக்கிறார் வீரவன்ச

மிலேனியம் சவால் உடன்பாட்டில், அமெரிக்காவுடன் இரகசியமாக கையெழுத்திடுவதற்கு  அலரி மாளிகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“அக்சா,  சோபா உடன்பாடு மூலம்  இராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, சிறிலங்காவின் சுதந்திரத்தை இல்லாமலாக்குவதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு.

மிலேனியம் சவால்  உடன்பாட்டின் மூலம், பொருளாதார, அரசியல் ரீதியாக,  சிறிலங்காவை அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்வதே அவர்களின் நோக்கம்.

இந்த உடன்பாட்டின் மூலம்,  இடம் தொடர்பான சட்டம், அடிப்படை வசதிகள், இடத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வலயம்,  ஆகிய மூன்று விடயங்களை உருவாக்குவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

தேசிய பொருளாதார சபை இந்த உடன்பாட்டு தொடர்பாக அமைச்சரவைக்கு விளக்கமளித்திருக்கிறது. அதில் இடம் தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உடன்பாட்டின் மூலம் 18 வீத நிலங்கள் அமெரிக்கா வசமாகக் கூடும்.  கிழக்கு மாகாணத்திலேயே அதிக இடம் அபகரிக்கப்படும்.

எனினும் இந்த உடன்பாட்டு மூலம் சிறிலங்காவுக்கு வருமானம் கிடைக்கும் என்று அமெரிக்கா கூறுகிறது. அவ்வாறு வருமானத்தை வழங்க வேண்டும் என்று எண்ணினால் ஏன் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும்?

மிலேனியம் சவால் உடன்பாட்டு மூலம் அமெரிக்காவுக்கு ஏற்ற வகையில் செயற்படும் அரசாங்கமொன்று சிறிலங்காவில் உருவானால், அவர்களது இலக்கை அடைந்து விடுவார்கள்.

மாறாக ஆட்சிக்கு வரும் அரசாங்கம் சுயாதீனமாகச் செயற்பட்டால், அந்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொள்ளவும் முடியும். அவ்வாறு விலகினால் அது எமக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்த உடன்பாட்டு கைசாத்திடப்பட்டால் எதிர்காலத்தில் சொந்த இடம் அற்ற மக்கள் உள்ள நாடாக சிறிலங்கா மாறும்.

சில நாடுகளில் இது போன்று சொந்த இடம் இன்றி வாழும் மக்கள் இருக்கின்றனர். அதே போன்றதொரு நிலைமை சிறிலங்காவில் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *