மேலும்

உலங்குவானூர்தி விபத்தில் இருந்து தப்பினார் சஜித் – மொட்டு தரப்பு சதிவேலை?

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்றிரவு உலங்குவானூர்தி விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளதாகவும், இது ஒரு சதிவேலையாக இருக்கலாம் என்றும் ஐதேக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சஜித் பிரேமதாச நேற்று வவுனியா, கிண்ணியா, தம்புள்ள ஆகிய இடங்களில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றி விட்டு குருநாகலவில் நடந்த பாரிய கூட்டத்தில் பங்கேற்கவிருந்தார்.

அவர் பயணம் செய்த உலங்குவானூர்தி, தரையிறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்தது.

இதனால் உலங்குவானூர்தியை தரையிறக்க முயன்ற விமானிகள் தடுமாற்றம் அடைந்து, உடனடியாக அதனை மேல் நோக்கி செலுத்தினர்.

அதன் பின்னர், பலமுறை விமானிகள் உலங்குவானூர்தியை தரையிறக்க முயன்ற போதும், இருள் சூழ்ந்திருந்ததால், அந்த முயற்சியைக் கைவிட்டனர்.

இதனால் சஜித் பிரேமதாச குருநாகல கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதையடுத்து அவர் மினுவாங்கொட கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள குருநாகல மாநகரசபை மைதானத்திலேயே, ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

சஜித் பிரேமதான தரையிறங்க முடியாத நிலையில், திரும்பிச் சென்று கூட்டம் முடிந்தவுடன், மின்சாரம் மீண்டும் வந்ததால், இது நாசவேலையாக இருக்கலாம் என்று கூட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, சஜித் பிரேமதாசவின்  உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கு சற்று முன்னர் இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்றும், அவரது  உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தரையிறங்க வேண்டிய இடத்தில் குருநாகல மாநகரசபை மின்சாரத்தை துண்டித்து விட்டதாகவும், அமைச்சர் அஜித் பிரேரா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஐதேக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *