மேலும்

கோத்தா ஆட்சிக்கு வந்தால் எம்சிசி உடன்பாடு மீளாய்வு – ரம்புக்வெல

அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால்,  அமைச்சரவையினால் நேற்று முன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 480 மில்லியன் டொலர் எம்சிசி கொடை உடன்பாடு உள்ளிட்ட அனைத்து இருதரப்பு உடன்பாடுகளையும், மீளாய்வு செய்வார் என்று, அவரது பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வியத்மக அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”அதிபர்  தேர்தல்களுக்கு முன்னதாக, எம்சிசி உடன்பாட்டுக்கு, அரசாங்கம் ஏன் அமைச்சரவை ஒப்புதல் கோரியது என்பது குறித்து பலத்த கரிசனைகள் எழுந்துள்ளன.

எம்சிசி கொடையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்து அரசாங்கம் வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றவில்லை.

இந்தக் கொடையின் வெளிப்படைத்தன்மை மற்றும், இது நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கவலைகளை எழுப்புகிறது.

உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு முன்னர், அதன் விபரங்களை வெளியிடத் தவறியுள்ள அரசாங்கம், பொதுமக்களை இருளில் வைத்திருக்கிறது.

இருதரப்பு உடன்பாடுகளின் விபரங்களை வெளியிட அரசாங்கம் தயங்குவதானது, அதன் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.

எமது அரசாங்கம் பதவிக்கு வந்தால்,  இத்தகைய உடன்பாடுகளில் கையெழுத்திடுவதற்கு முன்னர்,  அனைத்து உடன்பாடுகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,  வெளிப்படையான நடைமுறைகள் பின்பற்றப்படும்.

இந்த உடன்பாடுகள் அனைத்தையும் நாங்கள் மிகவும் கவனமாக ஆராய வேண்டும். குறிப்பாக இந்த உடன்பாடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் பொதுமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம், அப்போது தான் அவர்களுக்கு விபரங்களை வெளிப்படுத்த முடியும்.

எம்சிசியின் கீழ் உள்ள அனைத்து உடன்பாடுகளையும், ஆராய்வதற்கு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்க வேண்டும்.  அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.

இந்த உடன்பாட்டை விரைவாக கையெழுத்திடுவதில் அரசாங்கம் முனைப்புக் காட்டியதானது, அரசாங்கத்தின் நோக்கங்களைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள பல இருதரப்பு உடன்பாடுகள் ஒருதலைப்பட்சமானவையாகும்.

குறிப்பாக, சிங்கப்பூருடனான சுதந்திர வணிக உடன்பாடு முற்றிலும், ஒருதலைப்பட்சமானது.

நாங்கள் ஆட்சிமைக்கும் போது அவற்றை மீளாய்வு செய்யுமாறு அவர்களிடம் கோரலாம். அதைச் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது.

ஏனெனில் இந்த உடன்பாடுகளில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை.

இந்த அனைத்து செயல்களுக்கும் பின்னால் ஒரு மோசமான நடவடிக்கை உள்ளது.

இவை அனைத்தும் மோசமான உடன்பாடுகள் என்று நாங்கள் கூறவில்லை. எனினும் எல்லாம், இருதரப்பு நலன்களை உறுதிப்படுத்துபவையாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்,

எந்தவொரு உடன்பாடும் பரஸ்பர நன்மை பயப்பதாக இருக்க வேண்டும், ஒருதலைப்பட்சமானதாக இருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *