மேலும்

கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்ட கருத்துடன் நேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐதேக முறைப்பாடு செய்யவுள்ளது.

 

நேற்று நாளிதழ்களில் வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரங்களில், கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாளர் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், அவருக்கு ஆதரவாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள கருத்தும் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பத்தில், தற்போதைய இராணுவத் தளபதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கோத்தாபய ராஜபக்சவுக்கு சார்பாக வெளியிட்ட கருத்துக்களும் அதில் இடம்பெற்றிருந்தன. அதில் முன்னாள் படைத் தளபதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 2009ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்தை, பொதுஜன பெரமுன தமது தற்போதைய அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பது, நெறிமுறையற்றது என்று சஜித் பிரேமதாசவின் தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

“இது தெளிவான தேர்தல் சட்ட மீறலாகும், அத்துடன், இராணுவத்தை தங்கள் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தும் அவர்களின் நோக்கத்தையும் இது தெளிவாகக் காட்டுகிறது.

ஒருவரின் பெயர் அல்லது அறிக்கையைப் பயன்படுத்துவதாயின் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.அவர்கள் அதைச் செய்யவில்லை.

2009 ஆம் ஆண்டில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த அறிக்கை அல்லது கருத்தை பயன்படுத்தி இந்த விளம்பரத்தில் வெளியிட்டுள்ளனர்.

மிகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் நெறிமுறையற்ற தங்கள் தேர்தல் பரைப்புரைக்கு, அவர்கள் இராணுவத் தளபதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த தேர்தல் சட்ட மீறல் குறித்து குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும், முப்படைகளின் தளபதி என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், ஐதேக முறைப்பாடு செய்யவுள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *