மேலும்

ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக்குவேன் – சஜித்

தாம் ஆட்சிக்கு வந்தால், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு காலி முகத்திடலில், நேற்று மாலை நடந்த ஐதேகவின் முதலாவது பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“நாட்டில் உள்ள அனைத்து வகையான தீவிரவாதத்தையும் அழிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 30 ஆண்டுகால பேரை கையாண்ட  தனது விரிவான அனுபவத்தைப் பயன்படுத்தி, தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்க வேண்டும்.

பாதுகாப்புக்கான பொறுப்பை, போர்க்களத்தில் அனுபவமுள்ள மற்றும் 30 ஆண்டு கால போரை வென்று பணியை முடித்த ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனவே, பாதுகாப்பு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம்.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் பணியும் அவருக்கு வழங்கப்படும்.

இராணுவத்தினரை கூலி வேலைகளுக்கு ஈடுபடுத்தியவர்களை,  காகித அட்டை வீரர்களை, மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கு இடமளிக்க வேண்டுமா-  தன்னுடைய இரத்தத்தையும், சதையையும் அர்ப்பணித்தவருக்கு பதவி வழங்க வேண்டுமா?

நாட்டின் பாதுகாப்பா, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பா என்பதை யோசியுங்கள்.

குடும்ப – இராணுவ – அடிமை ஆட்சி அவசியம் இல்லை. பொதுமக்களின் சக்தியே வென்றெடுக்கப்படவேண்டும்.

நாட்டின் ஒழுங்கை ஒரு குடும்பம் தீர்மானித்து விட முடியாது.

நாம் அமைக்கும் புதிய ஆட்சியில் திருட்டு மோசடிகளுக்கு இடமளிக்கமாட்டோம். நாட்டின் இறைமை பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

நாங்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல. நாங்கள் நாட்டின் தற்காலிக பாதுகாவலர்கள்.

எமது ஆட்சியில் எந்த அரசியல்வாதிகளுக்கும் ஜம்பர் அணிவிக்க மாட்டோம். அதனை நீதிமன்றம் செய்யும்.

ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாமல் ஆக்குவோம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு உயர் தண்டனை வழங்குவோம்” என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *