மேலும்

விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு – 3 சிறிலங்கா படையினரும் விடுதலை

விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்துள்ளது.

2010ஆம் ஆண்டு விசுவமடு பகுதியில்  பெண் ஒருவரை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில், 2015ஆம் ஆண்டு மூன்று சிறிலங்கா இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், தலா 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இந்த தண்டனை மற்றும் தீர்ப்புக்கு எதிராக, குற்றவாளிகள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது ஐந்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில், நேற்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னான்டோ ஆகியோர், சிறிலங்கா படையினர் மூன்று பேரையும் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுத்து, விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

குற்றம்சாட்டப்பட்ட மூவரும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சாந்த சுபசிங்க, தனுஷ்க புஸ்பகுமார, பிரியந்த குமார ஆகிய மூன்று சிறிலங்கா இராணுவத்தினருமே விடுவிக்கப்பட்டவர்களாவர்.

புஷ்பகுமார சார்பில் முன்னலையாகிய  சட்டவாளர் ரஞ்சித் பெர்னாண்டோ, சிறிலங்கா படையினர் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு தீவிரவாத குழுவினால், வேண்டுமென்றே – தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டன என்று வாதிட்டிருந்தார்.

பின்னணி

2015 ஒக்ரோபர் 7ஆம் நாள், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்த ‘புதினப்பலகை’ செய்தி 

விசுவமடுவில் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, வயோதிப் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நான்கு சிறிலங்கா படையினருக்கும் தலா 25 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு விசுவமடுவில் 27 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்திய, 5 பிள்ளைகளின் தாயாரான வயோதிபப் பெண் ஒருவரைப்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.

குற்றவாளிகளாக காணப்பட்ட, நான்கு சிறிலங்காப் படையினரில், ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில், ஏனைய மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய வழக்கில், குற்றவாளிகளாக காணப்பட்ட பண்டித கெதர சாந்த சுபசிங்க, பத்திரண பண்டாரநாயக்க பிரியந்த குமார, தெல்கொல்லகே தனுஸ்க புஸ்பகுமார, கொப்பேராலகே கெதர தனுஸ்க பிரியலால் ரத்நாயக்க ஆகிய சிறிலங்கா படையினர் நால்வரும் தலா 20 ஆண்டு சிறைத்தண்டனையும்,  ஐந்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்கும்படியும்  யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

அதேவேளை, வயோதிப பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு  உள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகளாக காணப்பட்ட, படையினர் நால்வருக்கும்,  தலா 5 ஆண்டு சிறைத்தண்டனையும்,  ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கும்படியும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

உரிய நட்டஈட்டை செலுத்தத் தவறினால்,  மேலும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளான சிறிலங்கா படையினரின் உறவினர்களும்இன்று நீதிமன்றத்தில் சமுகமளித்திருந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டதும் அவர்கள் நீதிமன்றத்துக்குள் கதறி அழுதனர். ஒருவர் மயங்கி வீழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *