மேலும்

தாக்குதல்களுடன் தொடர்புடைய 59 பேர் கைது

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

“குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், 44 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 7 பேர் பெண்கள்.

மேலும் 15 பேர், தீவிரவாத விசாரணைப் பிரிவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  அவர்களில் இருவர் பெண்கள்.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில், தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட ஆறு பேரில், உள்ளடங்கியிருந்த நால்வரும் அடங்கியுள்ளனர்.

அவர்களில், மிகவும் தேடப்படுவோரில் ஒருவராக இருந்து, நாவலப்பட்டியில் கைது செய்யப்பட்ட  மொகமட் சாதிக் ஹக்கின் மனைவியான, பாத்திமா லதீபா, மாவனெல்லவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரியான சஹ்ரான் காசிமின் மனைவியான, பாத்திமா கதீயா, சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த நிலையில், அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மிகவும் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்தவர்களான, புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, மற்றும் மொகமட் காசிம் மொகமட் ரில்வான் ஆகியோர், சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் மிகவும் தேடப்படுவோர் பட்டியலில் இருந்த சகோரர்களான மொகமட் சாதிக் ஹக், மொகமட் சாஹிட் ஹக் ஆகியோர்  நாவலப்பிட்டியில் கைது செய்யப்பட்டனர்.  என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *