மேலும்

பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார்.  சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கடந்த 24 ஆம் நாள் கோரியிருந்தார்.

அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி விலகல் கடிதத்தை மறுநாள் கையளித்திருந்தார்.

காவல்துறை மா அதிபரும் பதவி விலகி விட்டார் என்றும், புதிய காவல்துறை மா அதிபரை இன்று (வெள்ளி) நியமிப்பேன் என்று நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

எனினும், காவல்துறை மா அதிபர் இன்னமும் பதவி விலகவில்லை என அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல்  மூலமும், கருத்துக்களைப் பெறுவதற்கு முற்பட்ட போது, அவர் பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டஸ் செய்தி கூறுகிறது.

காவல்துறை மா அதிபரை சிறிலங்கா அதிபர் பதவி நீக்கம் செய்ய முடியாது, நாடாளுமன்றத்தின் மூலமே அவரைப் பதவிநீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *