மேலும்

அவசரகாலச் சட்டம் பிரகடனம் – வெளிநாட்டு உதவியைக் கோருகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் இன்று நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடந்த தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, அவசரகாலச்சட்ட விதிகளை இன்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பிரகடனத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடவுள்ளார்.

வெளிநாட்டு உதவியைக் கோர முடிவு

சிறிலங்காவில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூர் அடிப்படைவாத அமைப்பு ஒன்றே நேற்று குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அந்த அமைப்புக்கு வெளிநாட்டு அமைப்புகளின் உதவிகள் கிடைத்திருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, விசாரணைகளுக்கு வெளிநாடுகளின் உதவிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு தூதுவர்களைச் சந்திக்கவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளின் உதவிகளைக் கோரவுள்ளார்.

இந்தியாவும் உதவத் தயார்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நேற்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு சிறிலங்காவுக்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

கைதேர்ந்த நிபுணர்கள் உதவி

சிறிலங்காவில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்கள் வெளிநாட்டு இஸ்லாமிய அமைப்புகளின் கைதேர்ந்த நிபுணர்ககளின் உதவியுடன் நடத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக அனைத்துலக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கில், இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) மற்றும் அல்கெய்டா போன்ற தீவிரவாத அமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது கையாளபப்பட்ட உத்தி இந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளின் நிபுணர்களே இவ்வாறான தாக்குதல்களுக்கு உதவியுள்ளனர் என்றும் அனைத்துலக தீவிரவாத எதிர்ப்பு நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *