மேலும்

கட்டுநாயக்க அருகிலும் குண்டு –  விமான நிலையத்தில் குவிந்த பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலும் நேற்று இரவு குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, கட்டுநாயக்க விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியில், குண்டு ஒன்றை விமானப்படையின் ரோந்து அணி கண்டுபிடித்து.

ஆறு அடி நீளமுடைய பிவிசி குழாய் ஒன்றில் இந்தக் குண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என விமானப்படைப் பேச்சாளர் கிகான் செனிவிரத்ன தெரிவித்தார்.

பயணிகள் திணறல்

அதேவேளை, சிறிலங்காவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகளை அடுத்தும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்தும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விமானப் பயணிகள் 4 மணி நேரம் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால் நுழைவாயிலில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் விமானப்பயணிகள் காத்திருக்க நேரிட்டது.

வழமைபோல விமான சேவைகள் 

எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வழமையாக இருப்பதாக விமான நிலைய, விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித்தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *