சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் நேற்று அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களின் வரைவை, அதனை கொண்டு வரும் நாடுகள், முன்கூட்டியே பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதற்கமைய, நேற்று சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு, பேரவைச் செயலகத்தில் பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
A/HRC/40/L.1என்று இலக்கமிடப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான இந்த தீர்மான வரைவு, கனடா, ஜேர்மனி, பிரித்தானியா, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்திருக்கின்றன.
‘சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான இந்த தீர்மான வரைவில், 2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு, மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்த வரைவில், 2021 மார்ச் மாதம், விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும் அந்த வரைவில் கூறப்பட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்த வரைவில், 30/1 தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மான வரைவுக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.