மேலும்

ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கில், 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, தலைமறைவாக இருந்து வந்தார்.

உச்சநீதிமன்றத்தின் மூலம், கைது செய்யப்படுவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுக் கொண்ட அவர், உச்சநீதிமன்றத்தில் கட்டளைக்கு அமைய நேற்றுக்காலை 9 மணியளவில், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்தார்.

அவரிடம், மாலை 5 மணிவரை சுமார் 8 மணிநேரம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன்போது, 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் அணி தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்பதை அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டார் என, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையான அட்மிரல் வசந்த கரன்னகொடவை, மீண்டும் நாளை காலை விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *