மேலும்

ஐ.நா தலையீட்டை எதிர்க்க சுரேன் ராகவனை ஜெனிவாவுக்கு அனுப்புகிறார் சிறிலங்கா அதிபர்

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஊடகங்களின் ஆசிரியர்களுடன் இன்று நடத்திய சந்திப்பின் போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க ஆகியோரைக் கொண்ட குழுவே ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் உயர்மட்டக் குழு பங்கேற்பதில்லை என்றும், ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா பிரதிநிதியே அதனைக் கையாளுவார் என்றும் வெளிவிவகார அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது.

எனினும், சிறிலங்கா அதிபர் தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடக்கு மாகாண ஆளுநரையும் ஜெனிவாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார்.

சிறிலங்கா விவகாரத்தில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவற்காகவே, இவர்கள்  ஜெனிவாவுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பழைய வடுக்களை கிளறாமல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வதற்கு இடமளிக்குமாறு இவர்கள் ஜெனிவாவில் கோரிக்கை விடுக்கவுள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன், கலாநிதி சுரேன் ராகவனும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *