மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

இந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவின் 45.27 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும்.

தற்போது சிறிலங்கா கடற்படையின் வசமுள்ள காங்கேசன்துறை துறைமுகம், இந்த திட்டத்தின் மூலம், சரக்குகளைக் கையாளக் கூடிய துறைமுகமாக மாற்றப்படும்.

அடுத்த மாத தொடக்கத்தில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் மூத்த அதிகாரிகள், இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூலம், இறக்குமதி, ஏற்றுமதித் துறைக்கு உதவியாக இருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.  அத்துடன், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளும், பெருமளவு நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளும் கிடைக்கும் என்று, அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டத்தின் கீழ், சரக்குக் கப்பல்கள் வரக் கூடிய வகையில், துறைமுகப் பகுதி 9 மீற்றர் வரை ஆழமாக்கப்படவுள்ளது. தற்போதுள்ள அலைதாங்கி  முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள ஒரு இறங்குதுறை முழுமையாக புனரமைக்கப்படும், அத்துடன் மேலும் ஒரு புதிய இறங்குதுறையும் அமைக்கப்படவுள்ளது.

காங்கேசன்துறை துறைமுக சுற்றுப்புறத்தில் 15 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில், திட்டத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளை சிறிலங்கா துறைமுக அதிகாரசபை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.அடுத்தகட்டமாக 50 ஏக்கர் பரப்பளவுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

திட்டத்தின் ஆரம்ப திட்டமிடல் செயல்முறைகளுக்கான ஆலோசகர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை துறைமுக அதிகார சபை ஆரம்பித்துள்ளது.

ஆலோசகர்களின் மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வெளிப்படையான முறையில் கட்டுமானம் செய்பவர் தெரிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும் என்றும், அமைச்சர் சாகல ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *