மேலும்

காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களுக்கு ஐதேக உறுதி

புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பாக மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் குழு, நேற்று கண்டியில், மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் தொடர்பாகவும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் விளக்கமளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான வரைவை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்றும்,வழிநடத்தல் குழுவின் யோசனைகள் தொடர்பான அறிக்கையே விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும்,  எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இது அரசியலமைப்புக்கான வரைவு அல்ல என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் தயா கமகே உறுதியளித்தார்.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மகாநாயக்கர்களிடம் வாக்குறுதி அளித்தார்.

எனினும் தற்போதைய நிலையில் புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்வதற்கு முயற்சி செய்வதை விட, தேர்தல்களை நடத்துவது நல்லது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரான வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களின் வாக்குரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறிய அவர், அரசியலமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு நாட்டை பிளவுபடுத்தும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வண. வரகாகொட சிறி ஞானரத்ன மகாநாயக்க தேரரையும் ஐதேக குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அஸ்கிரிய பீடம் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இந்தச் சந்திப்புகளில் அமைச்சர்கள் லக்கி ஜயவர்த்தன, பாலித ரங்கே பண்டார, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மயந்த திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *