மேலும்

இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்

இன்றைய உலகம்,  அரசியல், பொருளியல் கொள்கை, தீர்மானங்கள் குறித்த விவகாரங்களை,  தெளிவாக கணித வழிமூலம் கையாளும் தன்மை கொண்டது. பல்வேறு கொள்கைகள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்படுகிறது.

மக்களின் மனோயியல் குறித்த நுண்ணிய புள்ளிவிபரங்கள் சேரிக்கப்பட்டு  அதற்கு ஏற்ப அரசியல், பொருளாதார கொள்கை  மாற்றங்களை கொண்டு வரும் பண்பை  மேலைத்தேய நாடுகள் ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் இவ்வாறான புள்ளிவிபர கணக்கீட்டு வரைபுகளை  தமது வாடிக்கையாளரின் மனோநிலையை அறிந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம் வேலையாட்களை,  உள்நாட்டு வேலையாட்களைவிடக்  குறைந்த சம்பளத்தில் இறக்குமதி செய்து, வேலைக்கமர்த்தியும் வைத்திருக்கின்றன.

இந்திய இளம் கணினி வழி கணிப்பீட்டாளர்களின் மதிப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் அதிகம் காணப்படும் அதேவேளை இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் கூட, இந்த இளம் கணிப்பாளர்களை உபயோகப்படுத்தும் பண்பாட்டை பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த வருட முற்பகுதியில் இடம்பெற இருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தலில் இத்தகைய கணிப்பாளர்களும் கொள்கை ஆய்வாளர்களதும் உபயோகம் அதிகமாக இருக்கும் என்பது பொதுவான கணிப்பாக உள்ளது.

பூகோள அரசியலில் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் மாற்றம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கவல்லது.  இலங்கையில் தமிழ் மக்கள் தரப்பில் மட்டுமல்லாது கொழும்பு அரசியலிலும் தெற்காசிய பிராந்தியத்திலும் சர்வதேச அரசியலிலும் கூட, மிக முக்கிய தாக்கங்களை விளைவிக்க வல்லது.

இந்தவகையில் 2019 ஆம் ஆண்டு இலை துளிர் காலத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற  தேர்தலும், அந்த தேர்தலை நோக்கியதாக உள்நாட்டு அரசியல் கட்சிகளின் நகர்வுகளும்,  உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களால்  மிகவும் கவனமாக நோக்கப்பட்டு வருகிறது .

வட இந்தியாவின் மையப்பகுதி என்று குறிப்பிடக்கூடிய ஐந்து மாநிலங்களில் டிசம்பர் மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல்களில், முன்று மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி தோல்வி கண்டுள்ளது. சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பது அதன் எதிர்காலத்தை முக்கியமாக பாதிக்கும் என்ற பார்வை உள்ளது.

இந்த மூன்று மாநிலங்களினதும் மொத்த சனத்தொகை ஒட்டுமொத்த இந்தியாவின் சனத்தொகையில் 14 சத வீதம் என்று பார்க்கும் போது, இந்த வீழ்ச்சி மிகவும் கடுமையானதாகவே தெரிகிறது.

கிராமிய விவசாயப் பண்ணை வாழ்க்கையை அதிகம் கொண்ட இந்த மூன்று மாநிலங்களும் 12 சதவீதமான பாராளுமன்ற இருக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.

அது மட்டுமல்லாது,  இந்த மூன்று மாநிலங்களும் வட இந்தியாவின் மிக முக்கியமான  பிஜேபி செல்வாக்குள்ள  மாநிலங்களாக கருதப்பட்டன.  இந்து மத அடிப்படைவாதத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து,  கடந்த 2013 தேர்தலில் பிஜேபியை வெற்றி கொள்ள வைத்திருந்தன.

நான்கரை வருடங்களில் கோட்பாட்டு ரீதியாக மக்கள் மனங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.   மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பெற்றிருக்கின்றது.

பூகோள அரசியலின் மாற்றங்களின் பால் ஈர்க்கப்பட்டு,  வெளியுறவுக் கொள்கையில் முக்கிய கவனம் செலுத்திய பாஜகவின் நான்கரை வருட ஆட்சி, வடமாநில விவசாய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது என்பது தான் உண்மை.

கிராமிய மக்கள் மீதான விவசாய  கொள்கையினால், மக்கள் மத்தியில்  பெரும் அதிருப்தி நிலவுவதையே காட்டுவதுடன் பாஜகவின் வாய்ப்பேச்சு அரசியலுக்கு எதிராக  மக்கள்  எடுத்து கொண்ட நிலைப்பாடு சரியானதாக குறிப்பிடப்படுகிறது.

பிரதமர் மோடி அவர்கள் பதவி ஏற்ற பொழுது முதலாளி வர்க்கத்தின் பெரும் ஆதரவும் மேலைத்தேய கூட்டு வர்த்தக நிறுவனங்களின் நேரடி முதலீடுகளையும் இந்தியா எதிர்பார்த்திருந்தது.

ஆனால் FDI எனப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளில்( Foreign Direct Investment ) முற்று முழுதாக தங்கி இருந்த நிலை பெரும் ஏமாற்றத்தை தந்து விட்டது.

கிராமப்புற மக்களின் வங்கிக்கடன் வாழ்க்கையில், விவசாயிகள் பயிர் செய்த பொருட்களை விரும்பிய விலைக்கு விற்க முடியாத நிலையால்  வருமானத்தேக்கத்தை எதிர் நோக்கியமை முக்கியமாக கவனிக்கத்தக்கது.

அடுத்த ஆறு மாதங்களில் மிகமுக்கிய வேலைவாய்ப்பு, விவசாய நலன் திட்டங்கள் என விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும் வகையிலான வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை,  தற்போதைய மோடி அரசிற்கு இந்த தோல்வி உருவாக்கி உள்ளது

இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் குஜராத் மாதிரி திட்டத்தை போல்  கொண்டு வருவோம் என்ற உறுதி மொழிகள் யாவும் பொய்த்துப் போனநிலையும்,  தேவையற்ற நீண்ட மேடைப் பேச்சுகளும் பணமதிப்பு குறைத்தல் திட்டம் போண்றனவற்றால் மோடி குறித்த  மனக்கனவு மக்கள் மத்தியில் கீழ் நோக்கி  சரிந்ததாக  ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

கிராமிய மட்டத்தில் வீதிகள் அமைத்தல் கழிவறைகள் அமைத்தல் என பல புதிய திட்டங்களை மோடி அரசு செய்ய முற்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பின்மை, அடிப்படை சித்தாந்தமாகிய இந்து சமயவாதத்தை தகர்த்திருக்கிறது.

வடக்கில் மூன்று மாநில தேர்தல்களில் வெற்றியை கண்டுள்ள காங்கிரஸ்  கட்சி, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தும் வகையில் தென் மாநிலங்களில் தனது தேர்தல் கூட்டுகளை பலப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி உள்ளது.

இந்து மதவாத சக்திகளின் ஆட்சியை அடுத்த தேர்தலில் முறியடிப்பது என்ற நோக்கத்தில் டெல்லியில்  சுமார் 21 உள்ளுர் கட்சிகள் ஒன்றிணைந்து கூடியிருந்த போதிலும் , யாரை தலைமை வேட்பாளராக நிறுத்துவது என்ற தீர்மானம் எடுக்கப்படாத நிலை இருந்தது.

இந்த விடயத்தில் பல தலைவர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த போதிலும் . ஒரு மௌன  இழுபறி அரசியல் இருந்து வந்தது எனலாம். காங்கிரஸ் கட்சி யில் அதிக அனுபவம் கொண்ட  பா.சிதம்பரம் அவர்களின் பெயர் அதிகம் பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது .

ஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகும் வய்ப்பு உள்ளது என்றும் நாசூக்காக பலர் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வேளையில்,  தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் காங்கிரஸ் மீண்டும் கூட்டு சேர்ந்து இருப்பது மட்டுமல்லாது.  அண்மையில் காலமான தனது தந்தையார் கலைஞர் கருணாநிதி அவர்களின்  சிலை திறப்பிற்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்ராலின் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களை அழைத்திருந்தார்

இந்த விழாவிற்கு சமூகமளித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்ராலின் அவர்கள் ராகுல தான் அடுத்த பிரதமர்  வேட்பாளர் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஒர் அரசியல் வேகம் சூடுபிடித்திருக்கிறது. மாநில கட்சிகளிடையே இந்த அறிவிப்பு சற்று சீரணிக்க நாளெடுத்தாலும் , பொதுவாக ஏற்று கொள்ளப்படும் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

பலமுறை தேர்தல்களில் தோல்வியையே சந்தித்த ராகுல் காந்தியின் தலைமையில் பல மாநிலகட்சிகளும்  அதிருப்தி கொண்டிருப்பது தெரிகிறது   தலைமை வேட்பாளர் குறித்து பேச்சுகள் தேர்தலின் பின்பே நடத்தப்படும் என மேற்க வங்க முதல்வர் மம்தா பனர்ஜி போன்றவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்து சமயவாதமும் முதலாளித்துவ ஏகபோகமும் தமது உட்ச ஆதிக்கத்தில்  செயலாற்றும் நிலை தோன்றி பெரும்  சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படும் இவ்வேளையில்,  பாஜகவை வீழ்த்துவதே முதல் நோக்கமாக இருக்க வேண்டும்  என்பது பொதுவாக பல கட்சிகளதும் கருத்தாக உள்ளது..

தமது கட்சியின் வெற்றியில் அதீத நம்பிக்கை கொண்டுள்ள பாஜக தலைவர் அமித் ஷா,  அனைத்துக்கட்சிகளின் கூட்டு என்பது ஒரு மிகப்பெரும் மாயை என்று  குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பாஜக இந்த கூட்டணிக்கு எதிராக முழு மூச்சுடன் செயற்படும் என்பதில் ஐயமில்லை. பொருளாதார, சமய,  அரசியல் ,  ஊடக தந்திரங்களை நவீன முறையில்  அதிக செலவுகளுக்கு மத்தியில்  சந்திக்க  தயாராகிறது என்பது தெளிவு.

ஏழு தேசிய அரசியல் கட்சிகளை கொண்ட இந்தியாவில்,  பாஜக மட்டும் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேலான வருமானத்தை கொண்டிருக்கிறது. இந்த வருமானம் மொத்த கட்சிகளுக்கிடையிலான வருமானத்தில் 66சதவீதம்  என கணிப்பிடப்பட்டுள்ளது.

பன்னாட்டு கூட்டுறவு கம்பனிகளுடாக, மானியங்கள், நன்கொடைகள், பங்களிப்புகள் மூலம் பெற்றுகொள்ளப்படும் இந்த வருமானம் கட்சி பிரச்சார நடவடிக்கைகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர பிரதான ஊடக நிறுவனங்களின் வர்த்தக ஆர்வத்தை தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வல்ல திட்டங்கள் ஏற்கனவே தயாராகி வருகிறது.

ஏற்கனவே புது டில்லியில் உள்ளபாஜகவின் பழைய தலைமை அலுவலகம் ஒன்றில் சுமார் 250 பேர் கொண்ட  தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களை கொண்டு நாடுமுழுவதும் உள்ள சாதகமான- பாதகமான பத்திரிகையாளர்களை தெரிவு செய்து கொள்ளும் வேலை ஆரம்பமாகி விட்டது.

வடக்கே மூன்று மாநிலங்களிலும் ஏற்பட்ட தொல்விகளை தொடர்ந்து புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியுடன் அரசியல் ஆய்வு ஆலோசனை குழுக்கள், கருத்தாதரவு உருவாக்கல் போன்ற திட்டமிடல்கள் மிக வேகமான  முடுக்கி விடப்பட்டுள்ளன.

அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதிலும் மக்கள் உளவியல் மாற்ற சிந்தனைகளை தெளிவாக கணித முறைப்படி  ஆய்வு செய்வதிலும்  பிழைகளை காரணப்படுத்துவதற்குரிய  சொற்பதங்கள் தெரிந்தெடுக்கப்பட்டு   இந்து தேசிய வாத கருத்துகளை வெற்றி அடைய செய்வது இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் அதிகாரம் அதிக வளர்ச்சி கொண்டிருந்த வேளையில், அகில இந்திய அளவில் தனிக்கட்சி ஒன்றின் பொருளாதார  வல்லாதிக்கமும் ஊடக விளம்பரமும் பாரிய மாற்றத்தை தோற்று வித்திருந்தது.  அதேவேளை 38 கட்சிகளை கொண்ட பிராந்திய மற்றும் மாநில கட்சிகளின் மத்தியில் வாக்குப்பலம் சிதறுண்டு போயிருந்தது.

பிராந்திய கட்சிகள் மேலும் தம்டையே முரண்பாடுகளை வளர்த்து கொண்டு வாக்குப்பலத்தை சிதறடிக்கச் செய்தால் பொருளாதார பலமும் நடைமுறை காலத்தில் ஆளும் அரசியல்  பலமும், பன்னாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் கொண்ட  பா ஜ கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *