மேலும்

சிறிலங்காவின் வளர்ச்சிக்குத் தடையாகும் சீனா – ‘போப்ஸ்’

தனது நாட்டை மீண்டும் பேண்தகு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா தயாராகியுள்ளது. அடுத்துவரும் பத்தாண்டில் வளர்ந்து வரும் சந்தைகளில் தமக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகத் தம்மை நன்றாகத் தயார்ப்படுத்தும் சில நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் உள்ளடங்குவதாக அண்மையில் மக்கின்சி பூகோள நிறுவகத்தால் – McKinsey Global Institute – மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறிலங்காவின் இந்த வளர்ச்சிக்கு சீனா தடையாக இருக்கும்.  சிறிலங்காவின் மனித மூலதனமே அதன் பலமாக உள்ளது. 2015ல் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.766 ஆகக் காணப்பட்டது. இதனால் சிறிலங்காவானது உயர் மனித மேம்பாட்டு வகைக்குள் உள்ளடக்கப்பட்டது.

உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சிறிலங்காவானது அதன் மனித மேம்பாட்டுச் சுட்டியில் 73வது நாடாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1990 தொடக்கம் 2015 காலப்பகுதியில் சிறிலங்காவின் மனித மேம்பாட்டுச் சுட்டியானது 0.626 இலிருந்து 0.766 ஆக அதாவது 22.4 சதவீதத்தால் அதிகரித்தது.

சிறிலங்காவானது சுதந்திரமடைந்த பின்னரான மூன்று பத்தாண்டுகளில், ஆசிய வளர்ச்சி அதிசயத்தை பற்றிப் பிடிக்கும் நிலையில் காணப்பட்டது. இதன் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக இதன் அபிவிருத்தி பாதிக்கப்பட்டது.

‘1960களில், சிறிலங்காவானது அடுத்த ஆசிய வளர்ச்சியின் அதிசய நாடாக உருவாகி வந்த நிலையில், நாட்டில் தோன்றிய உள்நாட்டுப் போர் காரணமாக இது தடுத்து நிறுத்தப்பட்டது’ எனBreakout Nations என்கின்ற நூலின் ஆசிரியர் றுச்சிர் சர்மா தெரிவித்தார்.

1948ல் சிறிலங்கா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தலைவர்களால் பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியில் ஏற்பட்ட அநீதிகளைச் சீர்செய்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்ட போது இதனால் சிறுபான்மைத் தமிழ்மக்கள் பாரபட்சப்படுத்தப்பட்டனர்’ என ஆசிரியர் றுச்சிர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் வரலாறாகக் காணப்படுகிறது.

‘தமிழீழ விடுதலைப் புலிகள் என்கின்ற பெயரில் 1977ல் உருவாகிய தமிழ்க் கலகக்காரர்கள் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சிறுவர்களைப் படையில் இணைத்தமை மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளை யுத்தத்தில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தை நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தியதுடன் பல்வேறு தடைகளையும் இட்டனர்’ என ஆசிரியர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது நடந்து முடிந்து விட்டது. தற்போது சிறிலங்காவானது மீண்டும் வெற்றி நாடாக மிளிர்வதற்கான இரண்டாவது வாய்ப்பைப் பெற்றுள்ளது.

‘உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து விட்டது. யுத்த வடுக்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் சிறிலங்கா மீண்டும் வளர்ச்சி நாடாக மாறுவதற்கானா வாய்ப்பைப் பெற்றுள்ளது’ என சர்மா தெரிவித்தார்.

ஆனால் சிறிலங்கா இவ்வாறானதொரு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கு சீனா தடையாக இருக்கலாம். சீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்த முடியாததால் சிறிலங்கா தனது பாரிய துறைமுகங்களை சீனாவிற்குத் தாரை வார்க்க வேண்டிய நிலையிலுள்ளது.

ரொய்ட்டர் அறிக்கையின் பிரகாரம், சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட 1.12 பில்லியன் டொலர் கடனை அடைக்கும் நோக்குடன் கடந்த ஆண்டு சிறிலங்கா தனது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 584 மில்லியன் டொலர் பெறுமதிக்கு சீனாவிடம் குத்தகைக்கு வழங்கியது.

ஜூலை 2017ல் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் கீழ், அம்பாந்தோட்டைத் துறைமுகமானது 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு இராணுவ மற்றும் இராஜதந்திர ஆதரவுகளை 2007ல் சீனா வழங்கியதிலிருந்து சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கத் தொடங்கியது. சிறிலங்காவில் கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு சீனா உயர் வட்டி வீதத்தில் கடன்களை வழங்கியது.

சீனாவிடமிருந்து சிறிலங்கா பெற்றுக் கொண்ட கடனானது 2017ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 77.60 சதவீதமாகும். 1950 – 2017 வரையான காலப்பகுதியில் இது 69.69 சதவீதமாகக் காணப்பட்டது.

இதேவேளையில், சிறிலங்கா அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீமாக உள்ளது.

சிறிலங்கா மீதான கடன் சுமையானது சிறிலங்கா ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி அதிசய நாடாக உருவாவதற்கு கிடைக்கப் பெறும் வாய்ப்பிற்குத் தடையாக இருக்கலாம் என ஆய்வில் சுட்டிக்காட்டப்படுகிறது.

வழிமூலம்    – forbes
ஆங்கிலத்தில் – Panos Mourdoukoutas
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *