மேலும்

பலாலி விமான நிலைய விவகாரம் – புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை சிறிலங்கா விமானப்படையே மேற்கொள்ளும் என்றும், இந்தியாவிடம் கையளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருப்பது, புதுடெல்லி அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகார சபையும், இந்திய வெளிவிவகார அமைச்சும் அண்மையில் உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தன.

இது தொடர்பான தகவல்கள் நேற்றுமுன்தினம் வெளியாகிய நிலையில்,  சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணியை இந்தியாவிடம் கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும், ஊடகங்களில் வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றும் கூறினார்.

சுற்றுலா அபிவிருத்தி நிதியம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியன இணைந்து பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், இதற்கான பணிகளை சிறிலங்கா விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை 750 மில்லியன்  ரூபாவையும், சுற்றுலா அபிவிருத்தி நிதியம் 1000 மில்லியன் ரூபாவையும் செலவிடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பின் மீது சிறிலங்கா அரசாங்கம் அதிக கரிசனை கொண்டுள்ளது என்றும் எனவே, இதற்காக அபிவிருத்திப் பணியை கையளிக்க முன்னர், அதனை யார் மேற்கொள்வது என்று ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.

பலாலி விமான நிலையம், ஏ-320 விமானங்கள் தரையிறங்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான விரிவான திட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக செய்திக்குறிப்பை வெளியிட்ட நிலையில், சிறிலங்கா அமைச்சர் அதனை மறுத்திருப்பது புதுடெல்லி அதிகார மட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, உயர்மட்டப் பேச்சுக்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *